Sunday, June 17, 2012

மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!


மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!
---------------------------------------
புனிதப் பயணங்களில்
தலையான பயணமிது....!

மனிதருள் புனிதரும் அவர்தம்
மன்னவனும் சந்தித்துக் கொண்ட
முத்தான நிகழ்வு முகிழ்ந்த தருணமிது....!

முன்பின் இலா மூத்தோனும் அவனின்
அன்பின் உருவான நம் அண்ணலும்
தத்தம் பரஸ்பர நேசம் வெளிப்படுத்தியமை கண்டு
விண்ணோரும் மண்ணோரும்
வியந்து மகிழ்ந்த பயணமிது.....!

பொறுமைக் கடலாம்
நம் பூமான் நபிகளின்
இப்புனிதப்பயணம் இன்றுவரை
பூலோக விஞ்ஞானத்தால்
புரிந்து கொள்ளவியலாத புதிர்ப்பயணம்...!

புண்ணிய நபிகளின்
இவ்விண்ணேற்றப் பயணம்
ஆண்டவனை அறிந்திடும்
ஆன்மிக அகமியமெனும்
முன்னேற்றத்திற்கான பயணப் பாதையில்
முதல் மைல் கல்லானது....!

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....

ஹபீபும் அவர்தம் மஹ்பூபும்
ஹுப்பில் இணைந்த இனிய பொழுது...!

அஹதும் அஹமதும்
அண்மிக் களிப்புற்ற ஆனந்த வேளை...!

இப்பயணம் நிகழ்ந்தது ஓர்
இருள் நிறைந்த இரவில்தான்...

எனினும் அது....

ஒளியுறை அருளாளனும் அவன்
ஒளிநிறை அருளானவரும்
கூடிக் கதைத்த ஒளிப்பிரவாகத்தால்
அருளொளிவெள்ளம் நிரம்பி
வழிந்த வண்ண இரவானது.....!

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....

பைத்துல் முகத்தஸில்
நபிமார்க்கெல்லாம் நாயகமாக்கி
அழகு பார்த்த ஆண்டவன் நம்
அண்ணலின் அழகு முகம் காண
அழைத்து அகமகிழ்ந்த பொழுது இது..!

அல்லாஹ்வையும்,
சுவர்க்க நரகங்களையும்
நேரில் கண்ட சாட்சியாளராய்
நம் அன்பு நபிகளை
ஆக்கித் தந்த அரிய பொழுது இது....!

காருண்ய நபிகளின்
மிஹ்ராஜெனும் இப்பயணம்
காலம்,திசை,இடம் என்ற
உலகியல் எல்லைகளுக்குள்ளும்
காற்று,கிரகங்களெனும்
வானியல் எல்லைகளுக்குள்ளும்
அடங்காத அற்புதப் பயணம்....!

மன்னவனைக் கண்டு
மண்ணகம் மீண்ட எம்பெருமானும்
மறுமையில் விசாரணை நாளில்
மீஸானில் கனமாக்கும்
தொழுகையெனும் பரிசிலை
மாந்தர்க்காய்ப் பெற்று வந்த
மேலான பயணமே மிஹ்ராஜாம்.....!

மிஹ்ராஜின் சிறப்பெலாம்
மேன்மக்களே படித்தறிந்தீர்....இனியேனும்
மிஹ்ராஜால் மேன்மையுற்ற
சிராஜும் முனீராம் எம்
நாயகத் திருமேனியவர்கள்
நம்மைப் போன்ற மனிதரில்லை
நானிலத்தோரே நன்குணர்வீர்....!