Tuesday, May 29, 2012

உயிர்மெய் நினைவுகள்...!


உயிர்மெய் நினைவுகள்..!

உன்னை முதன் முதலில்

நேருக்கு நேர் சந்தித்த வேளை...

மறக்கவியலாத ஒரு மாலைப் பொழுது...

தனிமைச் சிறையுடைத்து என்

இளமை சுதந்திரம் அடைந்த

இனிய பொழுதல்லவா அது....!


அருகினில் நெருங்கி வந்தாய்...

விழிவிற்களின் இமை நாண்களில் நீ

பூட்டி எய்திட்ட பார்வை அம்புகளில்

சிதறித் தெறித்தன என் இளமை உடலங்கள்...!

உன் இதழ்களெனும் சிப்பி சில

உயிர்மெய் முத்துக்களை உதிர்த்தபோது

என் உடல் முழுதும் வியாபித்தன

வியர்வையின் ஒளிச் சிதறல்கள்....!


உன் மந்திர வார்த்தைகளில்

வசமிழந்து வீழப் போன எனைக்

கை தந்து நிலை நிறுத்தினாய்...

என் கண்களில் கண்டேன் பல்லாயிரம்

பட்டாம்பூச்சிகளின் வண்ணக் கோலம்...!

தன்னிலை திரும்பி உயிர்

ததும்பி நின்ற அவ்வேளையில்

என்னைக் கடந்து செல்லத் துவங்கினாய் நீ....!

புன்னகைத்தாய் மழையாய்...

என் உயிரின் அடி வரை நனைந்தேன்......!

அந்த முதல் சந்திப்பின் நினைவுகள்

இன்றும் என் நெஞ்சினில்

அழிந்திடாத இலக்கியமாய்

அமர்ந்திருக்கக் காரணம்.....


நீ அன்று என்னுள் எழுதிச் சென்றது

நம் காதல் மடலின் முதல் வரி...!

காலம் பல கடந்தும் இனித்திருக்கும்

நம் கவிதை வாழ்வின் முகவரி...!

Saturday, May 26, 2012

கவிதை அரங்கேற்றம்..!


கவிதை அரங்கேற்றம்..!


நானொன்றும்

புகழ்பெற்ற கவிஞனல்ல....எனினும்

நான் எழுதிய சில

கவிதைகளைக் கண்டு மகிழ்ந்து - என்னைக்

கவி பாட அழைத்திருந்தனர்

கவியரங்கம் ஒன்றில்

அழைப்பிதழ் அனுப்பித் தந்து.....!

சற்றே கால தாமதமாகச்

சென்று அரங்கம் சேர்வதற்குள்

கவியரங்கம் ஏற்கனவே தொடங்கியிருந்தது...

கவிஞர்கள், சுவைஞர்கள் எனப்

பெருங்கூட்டமே திரண்டு

கூடியிருந்த மாபெரும் சபைதனில்

கவிஞர்கள் பலரும் தம்

கவிதைகளை அரங்கேற்றினர்

பலத்த கரகோஷத்திற்கிடையே....!

என் முறையும் வந்தது....

மேடையேறினேன்....

கவிதை கொண்ட காகிதத்தைப் பிரித்தேன்...

மனதுக்குள் வாசிக்கத் துவங்கினேன்....!

சில நிமிடங்கள் தொடர்ந்தது என் மவுனம்.....

மேடையிலும்.....பார்வையாளர் அரங்கிலும்

தொடங்கியது சலசலப்பு....!

மேடையில் சிலர் பேசினர் தங்களுக்குள்....எனினும்

என் காதுகளை அவைத் துளைத்திட்டன.....

"என்ன திமிர் இவனுக்கு...?

மேடையேறி மவுனம் சாதிக்கிறான்....!"

"மேடை நாகரீகம் இல்லாத

இவனை யார் கவிதை பாட அழைத்தது...?"

இன்னும் பல விமர்சனங்கள்.....

பார்வயாளர் தரப்பிலிருந்தும்

பாய்ந்து வந்து என் செவிப்பறையைத் தாக்கின...!

"இவனெல்லாம் எதற்கு

கவிபாட வந்தான்...?"

"கவிஞர் பெருமக்கள் கூடி

கவிபாடிடும் சபையில்

காட்டான் இவனுக்கென்ன வேலை...?"

"கவிதை பாடத் தெரியாத

கபோதி இவனுக்கு

கவியரங்க மேடை ஒரு கேடா...?"

இன்னும் பல அர்ச்சனைகள்

சுற்றிலும் எனைச்

சூழ்ந்து கொண்டிருக்கையில்

வாய்ப்பு தந்து மேடையேற்றி

என்னைக் கவிபாடச் செய்த

கவிஞர் என்னருகில் வந்தார்...!

பதறிய நிலையினராய்

என் பக்கம் நெருங்கி வந்து கேட்டார்...

"என்ன நேர்ந்திட்டது உனக்கு....?

ஏன் என் மானத்தை

சபையினில் சந்தி சிரிக்கச் செய்கிறாய்...?"

அவர் மேலும் ஏதோ

சொல்ல வாயெடுக்குமுன்

நான் கூறினேன் அவரிடத்தில்....

பொறுமையாயிருங்கள்...

இப்போது கவி பாடுவேனென்று...

என் பதிலில் அரைகுறையாய்

திருப்தியடைந்த அவரும்

அரங்கில் அனையோரையும்

அமைதிகாக்கும்படி வேண்டினார்...

அரங்கில் சற்றே

அமைதி திரும்பிட

அவையோரை நோக்கி நானும்

கவிபாடத் துவங்கினேன்....

உணர்ச்சிகரமாய் பாடி முடித்தேன்....

கேட்டதும் அனைவரின்

முகத்திலும் வியப்பின் குறியீடுகள்....!

சற்று நேரத்திற்கு முன் எனைத்

தூற்றி ஆர்ப்பரித்து அடங்கிய சபை

இப்போது மீண்டும்

ஆர்ப்பரிக்கத் தொடங்கியது

எனை வாழ்த்திக்

கரவொலியினில்......!

கவிதையின் வரிகள் இவைதாம்...

தலைப்பு: மவுன மொழியில் ஒரு கவிதை....!

"மவுனம் என்பதே வார்த்தைகளற்ற

ஓர் உணர்ச்சிக் கவிதை தான்....!

மவுன மொழியினில்

கவி பாடிய என் மீது

உதட்டு நாண்கள் கொண்ட

உங்கள் வாய்விற்களிருந்து

பாய்ந்து வந்த வார்த்தை அம்புகள் -எனைப்

புண்ணாக்கிப் பிணமாக்கின....எனினும்

என் கவிதையும் அரங்கேற்றம் கண்டது

ஆம்...

பொறுமையிழந்து நீங்கள்

ஆர்ப்பரிக்கத் துவங்கு முன்....

என் மவுனம் இச்சபை கலைக்கும் முன்...

என் கவிதையும் அரங்கேற்றம் கண்டது...!"

Friday, May 11, 2012

தூர தேசத்திலிருந்து துணைவிக்கு ஒரு துக்க மடல்.


தூர தேசத்திலிருந்து துணைவிக்கு ஒரு துக்க மடல்.
---------------------------------------------------------------------------------

ஆயிரம் பேரிங்கு என்னை
அணைத்துக் கொள்கின்றனர்
அவ்வப்போது
நட்பு பாராட்டியே... எனினும்
என் மனம் அவர்தம் அணைப்பை
பொருட்படுத்துவதில்லை.

எதிர்ப்படும் தோழரனைவரும்
என்னோடு
கை குலுக்கிக் கொள்கின்றனர்
அன்பின் அடையாளமாய்... எனினும்
என் உள்ளத்தில் ஒரு அசைவுமில்லை.

சந்திக்கும் அனைவரும்
என்னிடம்
சரீர நலம் விசாரித்துச் செல்கின்றனர்
சகஜமாய்த்தான்... எனினும்
எனக்கவை சாதாரணமாகத் தோன்றுவதில்லை

இவ்வாறான

தளர்ச்சி,மந்தநிலை, துக்கம் மற்றும்
அதிருப்தியென எனைச் சூழ்ந்திட்ட
இயலாமைகளின் மூலகாரணம்
நீயானது குறித்து
ஆரும் வெளிப்படையாய்
அறிந்திருக்கவில்லை.

உயிரின் அடி வரை
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிடும்
உன் உன்னத ஸ்பரிசம்
கிட்டாது போய் பல வருடங்களானதால்
இப்போது என்னில் இல்லை
உணர்வுகள் எதுவும் உயிரோடு..!

உயிரும் மெய்யும்
உன்னோடு முழுதாய்
தந்து விட்டதாலோ என்னவோ
உணவுண்டு உயிர்வாழ்ந்தும்
உணர்வற்ற ஜடமாகவே இங்கு நான்
உலாவிக் கொண்டிருக்கிறேன்..!

தூரங்கள் நமைப் பிரித்து
துயர் தருகின்ற இப்பொழுதுகளில்
மன பாரங்கள் இறக்கி வைப்பதென்னவோ- நம்
மழலையின் கொஞ்சும் சிரிப்பின் நினைவும்
மாதத்தில் சில முறைகள்
தொலைபேசி வழியே வரும்
மாறாத உன் அன்பின் விசாரிப்பும் தாம்...!

பண்டிகை தினங்கள்
கொண்டாட்டங்கள் பலவும்
பணியின்றி விடுப்போடு
மகிழ்ந்திடவே வந்தாலுமவை
பக்கத்தில் நீயிருந்து
பரவசம் தரவில்லையாதலால்
பத்தோடு பதினொன்றாய்
எப்போதும்போல் வந்து கழிகின்றன...!

மனம் கொண்டு மணம் கொண்ட
மல்லிகையுன்னை வாட விட்டுவிட்டு
மனமின்றி அயல் தேச மண்மிதித்து இன்று
அகங்கார முதலாளி வீட்டீன்
அலங்காரத் தோட்டத்திற்கு
அடியேனும் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கின்றேன்...!

ஒரு முறை "மடையன்"எனச் சொன்ன
உடன்பிறந்த சகோதரனை அறைந்து
கன்னம் சிவக்கச் செய்த கோவக்காரனாய்
வீட்டிலென்னைக் கண்டிருக்கிறாய் நீ..! -இங்கோ
அகந்தை கொண்ட முதலாளியெனை
ஆயிரமுறை "மடையன்" என்றபோதும்
ஆர்ப்பரிக்காது அமைதி காக்கிறேன்....காரணம்
அவன் தரும் சில ஆயிரங்களில்
என் தன்மான உணர்வுகளனைத்தும்
மரத்துப்போய் விட்டதால்...!

நரக வேதனையில் உழன்றிங்கு
நலிந்தே பல ஆண்டுகள் கழித்து
நரம்புகள் தளர்ந்து
நாடிகள் சுருங்கியபின் உனை
நாடி வந்து சேர்ந்தால்
நன்மையுண்டோ...?
கோடிக் கணக்கில் பணம்
கொண்டு வந்து சேர்த்தாலும்
குணம் கெட்ட பலம்
அப்போது நலம் பெறுமா...?
என் சொல்வேன் என் நிலைமை...?

அழுது தீர்க்கும் ஆற்றாமையை
எழுதியே தீர்த்து இருக்கின்றேன்
பழுது ஏதுமின்றி விரைவாகவே- உன்
பக்கம் ஏகி உனைச் சேர்ந்திட
படைத்தோன் இறையிடம்
பரிசுத்த மனதினாய் பணிவுடன்
பகலிரவு நேரங்களனைத்திலும்
தொழுது வழுத்திடுவாயடி என்
துணையான தோழி நீயுமே ...!

Monday, May 7, 2012

ஒரு கவிஞனின் க(வி)தை !


ஒரு கவிஞனின் க(வி)தை !

என் படிப்பறையில்
ஒரு நாள்...
இரவு நேரம்
நல்ல நிசப்த வேளை.....!

மின்விசிறியின் அலைக்கழிப்பில்
அங்குமிங்கும் திரும்பிக் கொண்டிருந்தது...
மேசை மீது கனத்தினடியில் வைக்கப்பட்டிருந்த
என் கவிதை தாங்கிய காகிதம்...!

காகிதத்தின் அருகில்
நல்லதோர் கவிதை எழுதி முடித்த
வெற்றிக் களிப்பில் ,களைப்பில்
மூடியினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது என் பேனா....!

மேசை அடியினில்
குப்பைக் கூடையில் மொத்தமாய்க்
கொட்டிக் கிடந்தன...
நான் கசக்கி எறிந்திட்ட
நிறையக் காகிதங்கள்...!

அறையிலிருந்து
வெளியில் சென்று
திரும்பிய நான்
தற்செயலாக
படிப்பறையின் வாயிலில்
கால் வைத்த போது
அறையினுள் நிகழ்ந்த
ஒரு விசித்திர உரையாடலைச்
செவியுற்று வியப்பில்
வாசலில் அப்படியே நின்றேன்...!

குப்பைக் கூடைக் காகிதங்கள்
மேஜைக் காகிதத்திடம் ஒருமித்துக் கூறத் தொடங்கின....!

" நாங்களும் உன் சகோதரிகள்தான் -இதோ
இந்தப் பேனாவின் சொந்தக்காரன்
உன்போல் எம்மையும் மணமுடித்து
சிந்தனை மையல் கொண்டு
பேனாவின் 'மை' கொண்டு
எமை மருவியதில்
கருத்து எழுத்துக்களைக் கருக்கொண்டு
கவிதைக் குழந்தைகளை உருக்கொண்டு
உன் போலவே நாங்களும் பெற்றெடுத்தோம்...! "

எனினும் அவை.....

"நிறை மாத சிசுக்களாயில்லை எனக் கூறி
குறை தன்னுள் கொண்ட அவனே
 எமைக் குற்றவாளிகளாய்த் தீர்மானித்து
குடும்ப விலக்கும் செய்து எம்மைக்
குழந்தைகளுடன் குப்பையில் வீசி எறிந்து விட்டான்...!."

"எம்மில் குறை கண்ட அனுபவத்தில்
சிந்தனைப் பலவீனத்திற்கு அவன்
சிகிச்சை செய்து கொண்டு
சிறப்பாய் உன்னை மருவியதில்
சீக்கிரம் கருக்கொண்ட நீ
நல்ல உருக்கொண்ட நயமான
கவிதைக் குழந்தையைப்
பெற்றெடுத்துக் கொடுத்ததால்
உனக்கு மணவிலக்கும் இல்லை
குப்பைக் கூடை வாசமும் இல்லை..."

"நீ வேண்டுமானால் பார் சகோதரி....!"

"இன்னும் சிறிது நேரத்தில் எமைக்
குப்பை வண்டிகளில் ஏற்றி
அனாதைகளாக்கிவிட்டு -உன்னை மட்டும்
முத்தமிட்டுப் புகழ்ந்து போற்றுவான்..! - நீ
பெற்றெடுத்த குழந்தையாம்
கவிதையை பெருமையாய்
சபைதனில் அரங்கேற்றுவான்..!."

"எமக்குத்தான் இனி ஜீவனுமில்லை...!
ஜீவானாம்சமும் இல்லை...!
என்ன செய்வது சகோதரி...?"

மனவருத்தம் தான் எனினும்....

"நாங்கள் வாழாவெட்டிகளாய் மரித்தாலும்
உன்னையேனும் சுமங்கலியாய்
வாழக் கண்டதில் மகிழ்ச்சி எமக்கு..!- நீ
நிரம்பக் குழந்தைகளுடன் நீடூழி வாழ்க.....!"

இத்துடன் உரையாடல்
நிறைவுற்ற வேளை.....
வியப்பிலிருந்து விடுபட்ட நான்
படிப்பறையின் உள் சென்றேன்....

பதறிய சிந்தனையுடன் பாய்ந்த நான்
கவிதை கொண்ட காகிதத்தைப்
பெட்டியினுள் பூட்டி
பத்திரப் படுத்தினேன்...!

குப்பைக் காகிதங்களை வேகமாய்
அவ்வறையை விட்டும்
அப்புறப் படுத்தினேன்....!

காகித உரையாடல் தந்த
குற்ற உணர்வில்
தலை கவிழ்ந்த நான்....

நாளைய..
கவிதை அரங்கேற்றக் காட்சி

கண் முன் மின்னலாய்த்
தோன்றி மறைந்திடத்

தலை நிமிர்ந்தேன்...
கவிஞனாக.....!