Wednesday, September 18, 2013

மரணம் ...!

மரணம்...இது ...
இறைவனெனும் ஆசிரியர் இயற்றிய படைப்பெனும் புத்தகத்தின் இம்மைப் பதிப்பின் இறுதி வரி....!
மறுமைப் பதிப்பின் முதல் வரி..!

Monday, September 9, 2013

யா ரஸூலல்லாஹ்...!(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)



சத்தியத்தின் உருவே...யா ரஸூலல்லாஹ்...!
சமத்துவத்தின் கருவே...யா ரஸூலல்லாஹ்...!
படைப்புகளின் குருவே...யா ரஸூலல்லாஹ்...!
பண்புயர் அதிசயத் தருவே...யா ரஸூலல்லாஹ்...!

அற்புதங்களின் ஊற்றே...யா ரஸூலல்லாஹ்...!
அருட்கொடையின் காற்றே...யா ரஸூலல்லாஹ்...!
மன்னவனின் ஒளியே..யா ரஸூலல்லாஹ்...!
மதித்தேகும் நல்வழியே...யா ரஸூலல்லாஹ்...!

முஸ்லீம்களின் இதயத் துடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
மூமின்களின் நீங்காப் பிடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
வியப்பான நற்பிறப்பே...யா ரஸூலல்லாஹ்...!
விழுமிய சிந்தனைத் திறப்பே...யா ரஸூலல்லாஹ்...!

தீமைகள் தீண்டா மனிதமே..யா ரஸூலல்லாஹ்...!
திருமறையாய் வாழ்ந்த புனிதமே...யா ரஸூலல்லாஹ்...!
மதீனாவாழ் நாயகமே...யா ரஸூலல்லாஹ்...!
மன்பதையின் தாயகமே...யா ரஸூலல்லாஹ்...!

Saturday, September 7, 2013

தனிமை கண(ன) அதிர்வுகள்..!

அச்சமூட்டி எச்சரித்து
அமிழ்த்திய போதும்

ஆழ்மனக்கடலை நச்செரித்து
அவ்வப்போது

உன் பெயரை உச்சரித்தே
அடங்குகின்றன
என் இதழலைகள்....!

நீ அற்ற தருணங்களின் ரணத்தில்
சுற்றம் மறந்துபோய்

சுகங்களின் கதவடைத்து
சோக ராகம் இசைத்த போதும்

வெற்று கணத்தின் வெறுமை போக்கிட
காற்று தாலாட்டிடும் ஜன்னலாய்

உன் சிந்தனை தெளித்துப் போகிற
மகிழ்வான நினைவுச் சிதறல்களில்

தார்மீகக் காரணங்களேதுமின்றி
முற்றும் நனைகிறதென் மனமாளிகை.....!

மண்ணாகவே இருந்தேன்...
உன்னைக் காணும் வரை

பார்வை விதை விதைத்தாய்
அவ்வப்போது....
புன்னகை நீருற்றி வளர்த்தாய்..

சேர்ந்தே இருப்போம் என்ற
நம்பிக்கை உரமிட்டு என்னை வலுப்படுத்தினாய்

உன் ஊட்டத்தில் வளர்ந்து
விருட்சமானது என் நேசம்....

இத்தனைக்கும் பிறகு...

எதிரியைப் போல்
பிரிவு விஷம் வைத்து
என்னைப் பட்ட மரமாக்கியதேனோ....?