Saturday, July 13, 2013

பள்ளிவாசல்...!




வாசல்..பள்ளிவாசல்..தொழும் பள்ளிவாசல்.!

ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல் 

வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்  
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.

                                           (வாசல்....பள்ளிவாசல்..)


 கடமையானது ஐந்து வக்தடா... 
 மடமை கொண்டு நீ மறந்திடாதடா..!.

 நேற்று வரப்போவதில்லை... 
 நாளை  நம் கையில் இல்லை..!. 

எல்லாம் அவன் கையில் தானே ...
எதுவும் அசையாது தானே .!...

வாழ்க்கை உண்டிங்கு வல்லோன் அருளாலே... 
அவன் துணையில்லாமல் அவனியில் நாமேது ...?
வணங்கப் புறப்படு !....
                                          (வாசல்....பள்ளிவாசல்..)

வணக்கம் என்பது சுவனச் சாவியாம் 
பிணக்கம் கொண்டு நீ தொலைத்திடாதடா...! 

நம்மைத் தொழ வைக்கும் முன்பே...
நாமும் இறை தொழுதல் மாண்பே ...!

முறையாய்த் தொழுவோர்க்கு எங்கும்  
இறையின் அருளூற்று பொங்கும்...! 

வல்லான் அருள்பெற்றால் வாழ்வில் பயமேது ...?
வழிபாடு இல்லாமல் வாழ்வில் ஜெயமேது...?
வணங்கப் புறப்படு !....

வாசல்...பள்ளிவாசல்...தொழும் பள்ளிவாசல்..! 
ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல் 

வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்  
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.

Tuesday, July 9, 2013

தகர டப்பாவும் தகர்ந்த கற்பனைக் கோட்டைகளும்..!

தகர டப்பாவும் தகர்ந்த கற்பனைக் கோட்டைகளும்..!
-------------------------------------------------------------------------------
தொழுகை முடித்து பள்ளியிலிருந்து
வீடு திரும்பியபோது

வழியினில் கண்டதொரு காட்சியினில்
மனம் லயித்து
கவனிக்கத் துவங்கினேன்....

மெல்லிய தகர டப்பா ஒன்று வீதி நடுவில்
ஒய்யாரமாய் வீற்றிருந்தது...
பின்னர்
காற்றின் வருடலில் சில அடிகள்
மெதுவாக உருள ஆரம்பித்தது

கொஞ்ச தூரம் உருண்டு ஒரு
பள்ளத்தில் விழுந்தது ,,,

சில நிமிடங்களில்
ஓங்கி அடித்த சூடு காற்றில்
சில அடிகள் அந்தரத்திலும் ஆனந்தமாய்ப் பறந்து
ஒரு மேடான இடத்தில் வந்து சேர்ந்தது ...

காற்றின் வேகம் ஓய்ந்து போனதால்
தகர டப்பா தரை மீது மீண்டும் உருள் விளையாட்டில் ...

தகர டப்பாவை பின்தொடர்ந்த என் பார்வையோட்டம் அதிர்ச்சியில் நின்றது ///

திடீரென

அவ்வழியே வந்த வண்டியின் சக்கரத்தில்
தகர டப்பா அடிபட்டு நசுங்கிப் போனது கண்டு .....

இப்போது டப்பாவிடம் எந்த ஆட்டமும் இல்லை சாட்டமும் இல்லை...

மண்ணோடு மண்ணாகிப் போனது தகர டப்பா

நெற்றிப் பொட்டில் அடித்தது போல் ஒரு எண்ணம் .....

அட...நம் வாழ்க்கையும் இது போல்தானே...!

மரணத்தின் பிடியில்
மண்ணோடு மண்ணாகிப் போவது தானே நம் வாழ்வும்...!

எனினும்...
கோடிகளில் புரள ஆசைப்படுகிறோம்...
இறுதியில் ஒரு கோடித் துணியில்
கொஞ்சமும் புரளாவண்ணம் கட்டப் படுவதை மறந்து...!

நான்கு சக்கர உயர்சொகுசு வாகனங்கள் வாங்குவதன் மீது
நாள்தோறும் நப்பாசை கொள்கிறோம்...
நாளை நாம் மரித்து
பிணமானபின்
சக்கரமில்லா வாகனத்தில் சலனமின்றிப் பயணிப்பதை மறந்து...!

ஆயிரம் ஏக்கர்கள் கணக்கில் நிலம் சொந்தமாக்க ஆசைப்படுகிறோம்..
மரணித்த பின் ஆறுக்கு இரண்டு அடிகளில் அடங்கிப் போவதை மறந்து...!

மரணம் பற்றிய சிந்தனை மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் சகோதரர்களே...!