Tuesday, July 3, 2012

கோடாரி மனம்



கோடாரி மனம்



இயற்கையின் வனப்பை 
எழில்வனத்தில் ரசிக்கத் தொடங்கினேன்… 

அழகானதோர் ஆறு…! 
அதன் இருமருங்கிலும் 
ஆழ வேரூன்றி அடர்ந்து 
நீண்டு நிற்கும் தாய் மரங்கள்…..

அவற்றை அண்மிப் படர்ந்து 
வளர்ந்திருக்கும் சேய்களாம் 
பசும்புற்கள்,செடி கொடிகள்…

கண்கள் காணும் உயரத்தில் 
கலைந்து மறைந்திடாத
வாணவேடிக்கை காட்டிடும்  
வண்ண மலர்ப் பட்டாசுகள்....

இன்னுமனந்தம் அழகு 
கொட்டிக் கிடந்தது… 
வர்ணிக்க வார்த்தைகளின்றி 
வனவெளியினில் அனாதையாய்...!

இயற்கையின் அழகமுதம் 
அள்ளிப் பருகிக் கொண்டிருந்த 
எனது கண்களில் தற்செயலாய்
மரக்கிளையிலையின் 
பச்சை நிறத்திற்குத் 
தன்னை மாற்றிக் கொண்டிருந்த 
ஒரு பச்சோந்தி காட்சியானது…

பச்சோந்தியின் பசுமையை 
முழுமையாய் உள்வாங்கிய
மனவானரம் இப்போது 
தாவிக் குதிக்கத் தொடங்கியது...

அழகினை ரசித்த 
கவிதை மனமன்றத்தில் மெதுவாக 
அரங்கேறத் துவங்கின 
அழுக்கான மனித அபிலாசைகள் பலவும்…

உருண்டு திரண்டு 
ஓங்கி வளர்ந்த மரங்களின் 
எண்ணிக்கையும்.. அவற்றை
வெட்டி விற்றால் வரும் 
பணக் குவியலும் மட்டுமே 
இப்போது காட்சிகளாய்
என் மனக் கண்களில்…..

பச்சோந்தி மனதின் பசப்பும்
கோடாரி மனதின் கொடூரமும் அறியாத 
குணமகளாம் வனமகளோ 
காற்று நீவி விடும்
தன் வண்ணமலர்க் கூந்தலழகை 
ஆற்றுநீர்க் கண்ணாடியில் பார்த்து 
ரசித்துக் கொண்டிருக்கிறாள் 
எப்போதும் போல் அப்பாவியாய்.....!