Friday, March 23, 2012

சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!


சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!

நபியே! உங்களை அல்லாஹ்வின் பால் அவனின் ஏவலைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும் ,பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பியுள்ளோம்).   (அல் குர்ஆன்:33-46)

உங்களின் பால் ஒளியும்,தெளிவான திருவேதமும் வந்துவிட்டது.
                                                   (அல் குர்ஆன்:5-15)

சிந்தியுங்கள்…..மேற்கண்ட திருமறையின் வசனங்களை…..!

சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!

மனிதனெனும் படைப்பு
உடலுயிர் இவற்றின் பிணைப்பு !

உடலென்பது சுதேசியாம்
உயிரென்பது விதேசியாம் !

உடலூட்டம் மண்ணகத்து உணவுகளினாலெனில் 
உயிரூட்டம் நபியொளி,திருமறையெனும்
விண்ணகத்து உணவுகளினாலாம்.!

உடல் வளர்த்தல் உலக வாழ்க்கைப் பயனெனில்
உயிர் வளர்த்தல் இகபர வாழ்க்கைப் பயனாம்.!

படைத்தவனின் நெருக்கம் வேண்டுமெனில்
பண்புயர் நபியை உயிரினுமேலாய் நேசியுங்கள்…!

அதிபதியின் சுவனபதிப் பேற்றை அடைந்திட
மதிநபியின் மொழியமுதம் நாளும் வாசியுங்கள்…!

இறை தந்த அருட்கொடையாம்
திருமறையை இனிதே நமக்கீந்து

அருள்மறையாகவே முற்றிலும்
அவனியில் வாழ்ந்து காட்டிய

அண்ணலின் ஸுன்னத்தை
உயிர்வளியாய் சுவாசியுங்கள்..!

அஹமதைப் புறந்தள்ளி
ஆண்டவனை நெருங்கிடலாமென்று
இகமதில் நிகழாச் சொப்பனம் காணாதீர்..!

முஹம்மதிய அருட்கோலம் களைந்து- இழிந்த
முஷ்ரிக்கெனும் இருட்கோலம் பூணாதீர்..!

பொய்ஜாலங்களில் உலகைக் கவர்ந்தது போதும் ! -இனியேனும்
மெய்வழி நடக்க கைப்பிடிப்போம் மன்னர் நபி போதம்..!

முன்பின் இலா மூத்தோனும் புகழ்கின்ற
முத்து முஹம்மதைப் புகழ்ந்திடுவோம் அனுதினமும்…!

மன்னவனும்,விண்ணவரும் மாசற்ற நபி மீது
மகிழ்ந்து மொழிந்திடும் மகிமைநிறை ஸலவாத்தை

மனதுடனே நாமும் மொழிகின்ற எந்நாளும்
மண்ணகத்தில் நமக்குப் பொன்னாளாம்…திருநாளாம்..!

ஸல்லல்லாஹு..அலா…முஹம்மத் 
ஸல்லல்லாஹு…அலைஹி…வஸல்லம்..!

ஸல்லல்லாஹு…அலா…..முஹம்மத் 
ஸல்லல்லாஹு…அலைஹி….வஸல்லம்..!

ஸல்லல்லாஹு…அலா….முஹம்மத் 
யா ரப்பி ஸல்லி அலைஹிவஸல்லம்..!

Wednesday, March 21, 2012

மகாமன் மஹ்மூதும் எம் பெருமானும்




சாந்த சொரூபியாம் எம் சற்குண நபி போல்
காந்தமாய் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் என்று
விரல் சுட்டும்படி ஆருமில்லை
விண்,மண்,அண்டம் முழுவதிலும் !

படைத்தவனைப் பாரோர்க்கு காண்பிக்கவே
படைத்தவனின் ஒளியாக வந்தனரே
அகிலத்திற்கே அருட்கொடையாகவும்-அவனியோர்க்கு
அழகு முன் மாதிரியாகவும் திகழ்ந்தனரே !

முன்சென்ற நபிமார்கள் காலத்தில் -அவர்க்கு
முரண்பட்டு எதிர்த்த கூட்டத்தின் கொடுந்துன்பம் கண்டு
இறையோனும் அவர் மேல் சினம் கொண்டு -அம் மக்களை
இல்லாமல் அழித்திட்ட கதைகள் பலவும் உண்டு !

தக்காரும் மிக்காரும் இல்லாத நம் தலைவரோ
தமக்கு இன்னல் பல புரிந்த வைரிகளுக்கும்
கருணையுடன் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கி
இறையோனிடம் அவர்க்காய் துஆச் செய்தனரே !

தாயிப் நகரத்து மாந்தர்கள் அன்று -நம்
தாஹாவைக் கல்வீசி விரட்டி அடித்த கொடுமை கண்டு
வானவர் ஜிப்ரில் வள்ளலிடத்தில் முறையிட்டார் -ஆணையிட்டால்
மலைகளை புரட்டி அந்நகரையே மண்ணில் புதைத்திடுவேன் என்று !

மன்னர் நபி நாதரோ அம்மக்களை அழித்திட மறுத்தனரே
மக்களிழைத்த கொடுமைகள் அனைத்தையும் பொறுத்தனரே
வானவர் கோனை வழி திரும்பிடப் பணித்தனரே -அம் மக்களின்
பிழை பொறுத்து மன்னித்திடவே இறையை வழுத்தினரே !

இவ்வாறெல்லாம்....

வேறெந்த நபிகளிடமும் இல்லாத பொற்குணங்கள் கொண்டதினால் –நம்
வேந்தர் ரசூலுக்கு வேதம் நல்கிய வல்லோனும் -மறுமையில்
பெருமைநிறை "மகாமன் மஹ்மூத்" எனும் உயர்பதவிப் பரிசிலை -தன்
திரு மறையினில் வாக்குறுதியாய் மொழிகின்றான் !

மறுமையில் மஹ்சரின் விசாரணையின்போது –தம் உம்மத்திற்காய்
மகாமன் மஹ்மூதில் இனிதமர்ந்து பரிந்துரைப்பாரே
தம் உம்மத்தின் இறுதி நபரை நரகம் விடுவிக்கும் வரையிலும்
தம் தலை தாழ்த்தி மன்னவனை வேண்டிடுவாரே !

ஏனைய நபிமாரனைவரும் தமக்காக இறையிடம் கெஞ்சும் போதும்
எம் கோமான் தம் உம்மதிற்காக உள்ளம் உருகி இரஞ்சுவாரே
உம்மத்தின் பிழை பொறுத்து சுவனம் நல்க வேண்டிடுவாரே
உடனடியாய் அவரின் பரிந்துரை கபூலாகுமே காப்போனிடத்தில் !

அவர்தம் புனிதக் கரங்களில் "லிவாவுல் ஹம்தெனும்"
புகழ்கொடி வழங்கப்படுமே அதன் நிழல்தனில் -அன்பியாக்களும்
அவ்லியாக்களும்,சாலிஹீன்களும்அணிவகுத்திடுவனரே
அருமை நபிகளின் அடியொற்றி சுவனம் புகுந்திடுவனரே !

மறுமையின் வெற்றியை ஈட்டித்தரும் மாநபியின்
வஸீலாவை வல்லோனிடம் வேண்டிடும் பாங்கு துஆ அதுவேதாம் - நாமும்
மறுமையில் மஹ்மூதரின் பரிந்துரைக்குக் காரணமாகும்
பாங்கு துஆவை பாங்குடன் மறக்காமல் ஓதிடுவோம்.

Sunday, March 18, 2012

கரையும் நேரம்


கரையும் நேரம் 

பரஸ்பரம் காத்திருத்தலில் 
கனமாகக் கரைகிறது

காதலர்களின் நேரம் !

இருள் கவிந்த இரவின் வரவை 
எதிர்நோக்கிக் கரைகிறது 
ஆந்தை போன்ற ஜந்துக்களின் நேரம் !

கடல் மீண்டு கரை திரும்பும் 
கணவனைச் சேர்ந்திட 
மாலைக் கருக்கலை எதிர்பார்த்து 
கரைகிறது இல்லாளின் நேரம் !

அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட
இவற்றின் காத்திருப்பு வலிகளொன்றும் 
நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை..
பெரிதாய்த் துக்கப் படுத்துவதில்லை !

ஆனால்... 

அன்றாட வாழ்விற்குப் பொருளீட்டிட

பொழுது இருட்டுவதை மட்டுமே 
எதிர்நோக்கிக் கரைகின்ற 
திருடனின் நேரம்,விலை மாதுவின் நேரம் !
இவைகள் மட்டுமே 

இங்கு விசனப் படுத்தும் பொழுதுகளாய்...
காலம் தவிர்க்காத பழுதுகளாய்...
காலமெல்லாம் ஆகிப் போயின !





Tuesday, March 13, 2012

பரிசுத்த நபி மீது பாசம் கொள்வோம்..!


பரிசுத்த நபி மீது பாசம் கொள்வோம்..!

கை கொண்டு சொல்லொணாத் துன்பங்கள் பல தந்திட்ட

பாவிகளையும் மன்னித்தருளிய கருணைக் கடலே…!- அடிமை

பிலால் மீது அளவிலாப் பிரியம் கொண்டு - மாந்தரிடம்

பீடித்திருந்த உயர் குலக் கர்வம் கொன்றவரே....!

புண்ணியம் பெற்ற ஸஹாபாத் தோழர்களை

பூமியோர்க்கு வழிகாட்டும் விண்மீன்களாக ஆக்கிச் சென்றவரே..!.

பெருமையுடன் எளிமையாய் வாழ்ந்திட்ட பெருமானே...!

பேரோங்கும் மிஹ்ராஜ் துவக்கத்தில் - நபிமாரனையோர்க்கும்

பைத்துல் முகத்தஸில் இமாமாகி இறையை வணங்கிய இனியவரே...!

பொற்குணங்களின் தாயகமென்றும் வள்ளலென்றும்- குவலயம்

போற்றிடும் புகழுடன் என்றும் திகழ்பவரே…!

பெளர்ணமி நிலாவையும் மிஞ்சும் ஒளிகொண்டவரே...!

பஃக்தாத் முஹையத்தீன் உள்ளிட்ட இறைநேசர்களின்

பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரித்தான பண்பாளரே...!


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Saturday, March 10, 2012

மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...


மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...

மக்காவில் வந்துதித்த மாணிக்கக் கோமானே….!

மதீனாவில் உறைகின்ற மாண்புநிறைச் சீமானே…!

தக்காரும் மிக்காரும் இல்லா தகையாளரே..எம்மானே…!

திக்கனைத்தும் தீனுல் இஸ்லாம் பரவச் செய்த எம் பெருமானே….!

திகட்டாத தமிழ்கொண்டு தங்களைப் பாடுகிறேன் அடியேன் நானே…!

மிகைத்திட்ட ஆவலில் தங்களைக் காண விழைகின்றேனே….!

எம் காதல்பிணி தீர மதீனாவிற்கெமை அழைத்திடுவீர் அண்ணலே….!

தங்கள் திருமுகம் தினமும் காணும் வரம் தருவீர் மாமன்னரே…!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Saturday, March 3, 2012

நீல வானம்....ஒரு நாளில்

நீல வானம்....ஒரு நாளில் 

ஒரு நாள் முழுதும் அவ்வப் போது

வானத்தையே உற்று நோக்கினேன்.

வானம் என் கற்பனையில் வசப்பட்ட வேளை 

விண்ணழகில் மயங்கிய என்னை விட்டும் 

விரைந்து நீங்கிய என் கவிதை மனம்

விண்ணில் முழு உலா வந்ததன் வெளிப்பாடு இது

ஒரு நாளின் பல சமயங்களில் 

வானத்தின் தன்மை 

என் கற்பனையில் 


அதிகாலை வேளை…


நெடிய விண் சுவருக்கு நீல வெள்ளை அடிக்க
பகலவனுக்கு மேகங்கள் பணி கொடுக்கத் துவங்கும் வேளை
------------------------------------------------------------------------------------------------------------------------
காலை வேளை....


மேகங்களின் மேற்பார்வையில் ஆதவன் விண் சுவற்றில் நீல வெள்ளை பூசி தன் பணி தொடங்கிய வேளை...
---------------------------------------------------------------------------------------------------------------------------
மதிய வேளை...



நீல வண்ண விண் சுவற்றில் மேகங்களின் உத்தரவைப் புறந்தள்ளி
ஆதவன் தன்  சொந்தப் பொன் மஞ்சள் நிறத்தை முழுதாய்ப் பூசிய வேளை
------------------------------------------------------------------------------------------------------------------------------
மாலை வேளை....



வேகத்துடன் நிதானமின்றித் தவறான வண்ணம் பூசி அதனால் பணி இழந்த சூரியன் தலை கவிழ்க்க,, மேகங்கள் தாங்களே விண் சுவருக்கு அடர் நீல நிறம் பூச முடிவெடுத்து அதற்காக லேசான நீல வண்ணப் பட்டி கொண்டு தங்கள் முதல் பூச்சை துவங்கும் வேளை
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு வேளை....


விண் சுவர் முழுதும் அடர் நீலம் பூசி அது கறுத்து மிகவும் இருண்டு
போனதால் வெளிச்சத்திற்காக ஒரு வட்ட நிலவிளக்கு கைகளில்
ஏந்தி விண் சுவர் முழுவதும் ஆங்காங்கே விண்மீன்
ஜிகினாக்களைய்த் தூவி விண் சுவரை அழகுபடுத்திய மேகங்கள் சோர்வுற்று நிலவிளக்கொளியில் ஓய்வெடுக்கும் வேளை…

---------------------------------------------------------------------------------------------------