Wednesday, March 21, 2012

மகாமன் மஹ்மூதும் எம் பெருமானும்




சாந்த சொரூபியாம் எம் சற்குண நபி போல்
காந்தமாய் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் என்று
விரல் சுட்டும்படி ஆருமில்லை
விண்,மண்,அண்டம் முழுவதிலும் !

படைத்தவனைப் பாரோர்க்கு காண்பிக்கவே
படைத்தவனின் ஒளியாக வந்தனரே
அகிலத்திற்கே அருட்கொடையாகவும்-அவனியோர்க்கு
அழகு முன் மாதிரியாகவும் திகழ்ந்தனரே !

முன்சென்ற நபிமார்கள் காலத்தில் -அவர்க்கு
முரண்பட்டு எதிர்த்த கூட்டத்தின் கொடுந்துன்பம் கண்டு
இறையோனும் அவர் மேல் சினம் கொண்டு -அம் மக்களை
இல்லாமல் அழித்திட்ட கதைகள் பலவும் உண்டு !

தக்காரும் மிக்காரும் இல்லாத நம் தலைவரோ
தமக்கு இன்னல் பல புரிந்த வைரிகளுக்கும்
கருணையுடன் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கி
இறையோனிடம் அவர்க்காய் துஆச் செய்தனரே !

தாயிப் நகரத்து மாந்தர்கள் அன்று -நம்
தாஹாவைக் கல்வீசி விரட்டி அடித்த கொடுமை கண்டு
வானவர் ஜிப்ரில் வள்ளலிடத்தில் முறையிட்டார் -ஆணையிட்டால்
மலைகளை புரட்டி அந்நகரையே மண்ணில் புதைத்திடுவேன் என்று !

மன்னர் நபி நாதரோ அம்மக்களை அழித்திட மறுத்தனரே
மக்களிழைத்த கொடுமைகள் அனைத்தையும் பொறுத்தனரே
வானவர் கோனை வழி திரும்பிடப் பணித்தனரே -அம் மக்களின்
பிழை பொறுத்து மன்னித்திடவே இறையை வழுத்தினரே !

இவ்வாறெல்லாம்....

வேறெந்த நபிகளிடமும் இல்லாத பொற்குணங்கள் கொண்டதினால் –நம்
வேந்தர் ரசூலுக்கு வேதம் நல்கிய வல்லோனும் -மறுமையில்
பெருமைநிறை "மகாமன் மஹ்மூத்" எனும் உயர்பதவிப் பரிசிலை -தன்
திரு மறையினில் வாக்குறுதியாய் மொழிகின்றான் !

மறுமையில் மஹ்சரின் விசாரணையின்போது –தம் உம்மத்திற்காய்
மகாமன் மஹ்மூதில் இனிதமர்ந்து பரிந்துரைப்பாரே
தம் உம்மத்தின் இறுதி நபரை நரகம் விடுவிக்கும் வரையிலும்
தம் தலை தாழ்த்தி மன்னவனை வேண்டிடுவாரே !

ஏனைய நபிமாரனைவரும் தமக்காக இறையிடம் கெஞ்சும் போதும்
எம் கோமான் தம் உம்மதிற்காக உள்ளம் உருகி இரஞ்சுவாரே
உம்மத்தின் பிழை பொறுத்து சுவனம் நல்க வேண்டிடுவாரே
உடனடியாய் அவரின் பரிந்துரை கபூலாகுமே காப்போனிடத்தில் !

அவர்தம் புனிதக் கரங்களில் "லிவாவுல் ஹம்தெனும்"
புகழ்கொடி வழங்கப்படுமே அதன் நிழல்தனில் -அன்பியாக்களும்
அவ்லியாக்களும்,சாலிஹீன்களும்அணிவகுத்திடுவனரே
அருமை நபிகளின் அடியொற்றி சுவனம் புகுந்திடுவனரே !

மறுமையின் வெற்றியை ஈட்டித்தரும் மாநபியின்
வஸீலாவை வல்லோனிடம் வேண்டிடும் பாங்கு துஆ அதுவேதாம் - நாமும்
மறுமையில் மஹ்மூதரின் பரிந்துரைக்குக் காரணமாகும்
பாங்கு துஆவை பாங்குடன் மறக்காமல் ஓதிடுவோம்.

No comments: