Sunday, April 29, 2012

வேர்களை மறந்த விழுதுகள்...!


வேர்களை மறந்த விழுதுகள்...!

  விட்டில்கள் அநேகம் ஒன்று கூடி
  விளக்குகளின் ஒளி அணைத்திட நினைத்ததாம்

   மீன்களனைத்தும் ஒன்று கூடி
   நீர்நிலைகளைப் புறக்கணிக்க நினைத்ததாம்

   மேகங்களனைத்தும் ஒன்றிணைந்து
   வானத்தை விலக்கிவைக்க நினைத்ததாம்

   இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
   நபிகளை,நல்லோர்களை மறந்த சிந்தனைகள்

   இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
   நபி புகழ்,நாதாக்கள் புகழ் மறைத்த போதனைகள்

   மேற்கண்ட முயற்சிகள்தாம் கைகூடுமோ...?
   மேதினியில் வாகைதான் அவை சூடுமோ...?

   வறண்ட மனபூமியின் ஆழம் துளைத்துப் பரவி
   வளமான மண்பூமிமேல் இஸ்லாமிய மரமாய்
   உன்னை நிற்க வைத்தது இறைநேசரெனும் வேரடா...!

   வேர்தனை மறைத்து மண்மீதினில்
   விருட்சமாய் வளர்ந்த இறுமாப்பில்-அடியோடு
   வேரைப் பிடுங்கிட நினைத்தால் வீழ்வாயடா....!

   குர்ஆனும் ஹதீதும் நம் வழிகாட்டிகளென்றாய் நீ ..பின் ஏன்
   குர்ஆனாகவே வாழ்ந்த எம் ஹபீபினைப் புகழ மறுக்கின்றாய் ...?

   சன்மார்க்கக் கடலின் நுரையள்ளிக் குடித்துவிட்டே
   சகலமும் அறிந்ததுபோல் ஆர்ப்பரிக்கும் உனக்கு
 
   ஆன்மீகக் கடலின் ஆழ் முத்தெடுத்த
   அடக்கப் பணிவுநிறை இறைநேசர்களெனும்

   ஆன்றோரின் அறிவுப் புலமைகள்
   அகமிய ஞானங்கள் எங்கனம் விளங்கும்....?

   திரும்பிடுவீர் திசை மாறிச் சென்ற எம் சகோதரர்களே..!
   விரும்பிடுவீர் மேன்மையான நற்செயல்கள் புரிந்திடவே...!
 
   நம் ஈமான்கள் முற்றாய் பாதுகாக்கப் பட்டு
   இகபர வாழ்வினில் இனிதாய் வாகை சூடிட

   இஸ்லாமியராய் நம்மையெல்லாம் திகழச் செய்த
   இறைநேசப் புனிதர்களின் வழி நடப்போம்...!

...................................................................................................................................

Wednesday, April 18, 2012

அருளென்ற மழையிலே....!


அருளென்ற மழையிலே....!


அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!

அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே...!
இருளான மாந்தர்தம் இதயங்கள் ஒளிரவே இனியநபி தோன்றினாரே...!
(இனியநபி தோன்றினாரே...! )

சூரியனும் சந்திரனும் ஒன்றாகித் தோன்றுமோ ஒளிநபிகள் தோன்றினாரே...!
தூய்மையும் வாய்மையும் ஒன்றான தன்மையாய் தாய்நபிகள்  தோன்றினாரே...!
கஷ்டங்கள் போக்கிடும் சலவாத்தின் காரணராய் கவின் நபிகள் தோன்றினாரே...!
நஷ்டங்கள் இன்றியே நம்மைக் கரைசேர்த்திட நாதர்நபி தோன்றினாரே...!
  
 அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!



Friday, April 6, 2012

மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்


மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------

க்கத்துச் சோலையில் மாணிக்கமாய் மலர்ந்து
மாந்தர்தம் உள்ளங்களில் மன்னராய் மகுடம் சூடி
மிஹ்ராஜ் இரவினில் மேலோனைக் கண்டு மீண்டு
மீசானில் கனமாக்கும் தொழுகையை நமக்களித்து
முன்னோரின் சிலை வணக்கம் முற்றிலும் ஒழித்து
மூப்பில்லா இறையோனின் ஒருமைப் பண்புணர்த்தி
மென்மை வாய்மை தகைமையுடன் தீனை
மேன்மையாய் மக்கள் உள்ளங்களில் வளரச் செய்து-உலகத்தின்
மையலில் கறை படிந்த இதயங்களையெல்லாம் -தன்
மொழியமுதம் கொண்டு சுத்தப் படுத்தி -இம்மையின்
மோகங்களை விட்டும் மக்களைத் தூரமாக்கி
மெளலாவாய் எம்மை நேர் வழி நடத்தும்- மதீனா வாழ்
மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்.

அல்லாஹீம்ம ஸல்லி அலா முஹம்ம தினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா,,,,!

Sunday, April 1, 2012

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்




காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கல்பு பரிசுத்தம்நிறை
காத்தமுன் நபிகளின்
கனிவான தரிசனம்
கனவினில் கண்டிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காரணப் பெயர்கொண்ட
காவிய முஹம்மதெனும்
கருணை வள்ளலின்
கவின்முகம் கண்டிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கஷ்டங்கள் நீக்கிடும்
காரண சலவாத்தின்
கருவியாம் அஹமதின்
காதலைப் பெற்றிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கணக்குகள் தீர்க்கப்படும்
கடுமைநிறை மறுமையில் -கைவிடாதெமைக்
கரைசேர்த்திடும் மஹ்மூதரின்
கனிந்த பரிவினை இகத்திலும் பெற்றிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காலமுள்ள காலமெல்லாம்
கண்ணியமாய்ப் புகழப்படும்
காருண்ய நபிகளின் கரம்பற்றி முத்தி
கண்களில் ஒற்றிடவே....!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காப்போனின் காதலரை
காசினியின் நாயகரை
கண்குளிரக் கண்டு
களிப்பேருவகை கொண்டிடவே...!

காணாப் பிணி கொண்டு
கவிபாடும் இவ்வெளியவன் மீது
கழிவிரக்கம் கொண்டு
கல்பு குளிர்ந்திடக் கனவினில் வருவீரே
கண்கொள்ளாக் காட்சி தருவீரே...!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!