Tuesday, February 28, 2012

கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்


கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்

தரணி முழுமைக்கும் அருள்விளக்காக வந்தவரே -பெற்ற
தாயினும் மேலான பாசம் எம் மீது கொண்டவரே
திருமறையாம் அருள்மறைக் குர்ஆனைத் தந்தவரே
தீனோர்க்குக் காவலராய் என்றும் திகழ்பவரே
துணையில்லா துய்யோன் ஏகன் அல்லாஹ்வின்
தூதராக வந்த தூய்மைநிறை வாய்மையாளரே
தெளிந்த நீரோடையாய் வாழ்ந்து சிறந்தவரே
தேய்மானம் இல்லாத தீன் ஞானம் தந்தவரே
தைரியம் வீரம் விவேகம் செறிந்த மாமன்னரே
தொல்லைகள் தந்திடும் ஷைத்தானையும் எளிதாய்
தோல்வியுற்று புறமுதுகிடச் செய்த மாவீரரே
தெளஹீத் எனும் தீபம் தரணியில் பரவச் செய்த தீரரே
தஃதீர் எனும் தலைவிதியையும் தன் துஆவினால் மாற்ற வல்லவரே
தன்னிகரில்லா தங்க நபியே….! தகைமை நிறை தாஹா ரஸூலே...!
நல்லவர்க்கெல்லாம் நல்லவராம்
நற்குணங்களின் நாயகராம் எங்கள்
கருணை நபிப் பெருமான் முஹம்மதின் மீது
கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்…!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Saturday, February 25, 2012

அஹமது எனும் எம் தாய்...!


அஹமது எனும் எம் தாய்...!

ஆதி இறையோனின் 
அன்பார்ந்த தூதாய்.....

இகமதில் வந்துதித்தார் 
புகழ்நிறை அஹமதாய்...!

விளங்குகிறார் இறையோனின் 
விருப்பம் நிறை ரஹ்மத்தாய்...!

திகழ்கிறார் அவனியில் தீனோரனைவரும் 
உரிமை கொண்டாடிடும் பொதுச்சொத்தாய்...!

மலர்ந்தாரே தீனுல் இஸ்லாமெனும் 
மாபெரும் விருட்சத்தின் ஏக வித்தாய்....!

ஒளிர்ந்தாரே அஹதின் நூராக 
ஆன்மீக ஆழியுறை அழகு முத்தாய்....! 

ஆக்கிச் சென்றாரே நம் அனையோரையும் 
அரும்பேறு பெற்ற தம் உம்மத்தாய்...!

காட்டிச் சென்றாரே கண்ணாடியைப் போல் 
வாழும் நெறி முழுதும் வழிந்தொழுகும் சுன்னத்தாய்....!

நிலவைப் பிழந்தது போல் பல அற்புதங்களை நிகழ்த்தி
கண்டோர் வியந்திடப் பறிமாறினார் காட்சி விருந்தாய்..!

இம்மையிலும் குணம் தந்தாரே இனிதாக
நம் உளப் பிணிகளனைத்தும் நீக்கி மருந்தாய்...!

மறுமையிலும் தவறாது பொழிவாரே 
கருணை மழை நம் மீது ஷஃபாஅத்தாய்...!

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணலின்
அறிவுரைச் சொல் இனித்திடுமே திகட்டாத அமிழ்தாய்...!

பொற்குணங்களின் தாயக நபி நாயகத்தை புகழ்ந்துருகிப் 
புண்ணியம் பெற்றிடவே மொழியானாளோ நம் தமிழ்த்தாய்....?

மன்னர் முஹம்மதின் அரும் சிறப்புகளனைத்தும்
ஐயமின்றிப் புரிந்திட்டோம் நாம் எளிதாய்....!

இருப்பினும்....

நம்மில் அற்ப மானிடர் சிலர் அஹமது நபிகளின் 
அற்புதங்களை நம்ப மறுக்கின்றனர் முழுதாய் ...!

சற்குண நபிகளின் சரித்திரப் புகழ்தனை
சற்றும் உணராதிருக்கின்றனர் பேதை மனதாய்...!

முப்பொழுதும் பொருந்தும் காரணப்பெயர் கொண்டிலங்கும்
முஹம்மதின் புகழ் பாடுதலை வெறுக்கின்றனர் பழுதாய்...!

தலையும் விலையும் இல்லா தறுதலைகள்
சிலரிங்கு ஆக்கிக் கொண்டனர் தம் மானம் புறத்தாய்...!

தங்கநபிப் புகழ் மறைக்கத் துணிந்த காரணத்தினால் 
தரணியில் அவர் உழல்வர் தீராத பித்தாய்...!

அர்ரஹ்மானின் நேசரே தங்களின் 
அருமைப் பண்புணர்ந்தோம் நாங்கள் இனிதாய்...!

தன்னிகரில்லா தாஹா ரசூலே தாங்கள் தான் -என்றும் எமைத்
தகைமையுடன் நேர்வழி நடத்தும் எம் தாய்....!




Friday, February 24, 2012

என்னவென்று சொல்வதம்மா...?



என்னவென்று சொல்வதம்மா...?

என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...! 


என்னவென்று .....


பொன்னான மேனியின் கஸ்தூரி வாசமே
பூலோகம் மீதினில் பூமாரி வீசுமே
முகவொளி வெள்ளம் பார்த்து வெட்கிப் போகும் வான்மதி 
தகைநிறை உள்ளம் பார்த்து வற்றிப் போகும் நைல்நதி 
ஏந்தல் நபிநேசம் அதுவே எங்கள் சுவாஸம்
அவர் தாம் எங்கள் பாவக் கறைகள் நீக்குவார் 
அடியோரெம்மை சொர்க்கக் கரையில் சேர்க்குவார் 


என்னவென்று .....


மதீனாவில் வாழ்ந்த்திடும் மன்பதையின் காவலர்
நம்நாவில் மொழிந்திடும் ஸலவாத்தின் நாயகர் 
புர்கானை உலகத்தோர்க்கு மறையாகத் தந்தவர்
புவிவந்த தூதர்க்கெல்லாம் தலையாகி நின்றவர் 
அருமை நபி இதயம் ஆன்மீக ஒளியின் உதயம்
அவர் பிறந்த இடம் அரேபியாவின் மக்காவாம்
அவர் தாம் எங்கள் அன்புநிறைத் தாஹாவாம்.....



என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...! 


Thursday, February 23, 2012

இணைய நட்புகளே….! சற்று கவனிப்பீர்…..!


இணைய நட்புகளே….! சற்று கவனிப்பீர்…..!

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நமது சமுதாய நிலைமை நாறிப் போன தற்காலத்தில் இணையம் உட்பட அனைத்து ஊடகங்களின் வழியே கண்காட்சிப் பொருளாகக் கவர்ச்சியும் மலிவு விற்பனைப் பொருளாகக் கற்பும் காட்டப் படும் நிலை மாறாத வரை நாம் கண்ணியம், கற்பு நெறி, ஒழுக்கம் இவைகளை எழுத்தில் மட்டுமே காண முடியும் போலிருக்கிறது.

நெடிய இணையப் பாதையில் எப்பொழுதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது.திரும்பும் திசைகளனைத்திலும் தீயவன் சைத்தானின் வலைப் பின்னல்கள்.கொஞ்சம் பிசகினாலும் நம் ஈமானைப் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை.

இணையத்தில் சமூக வலைத் தளங்களின் உருவாக்கம் பல நன்மைகளைத் தருகின்ற அதே வேளையில் இவ்வகைத் தளங்களால் சில தீய விளைவுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.இவை பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை.அனைவரும் அறிந்ததே.

எனவே, தோழர்கள் இணையப் பாதையில் பயணிக்கும் வேளையில் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட்டு காவலாக இறையச்சத்தையும் மற்றும் வழித் துணையாக இறைத் தூதர் நெறிமுறைகளையும் கொண்டு சைத்தானின் சூழ்ச்சிகளை வென்று பயணிக்க வேண்டுகிறேன்.

நட்புடன்
அபுஸாயிமா

Tuesday, February 21, 2012

ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்



ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்




த்திய சன்மார்க்கப் போதனை செய்தே - சரித்திரச்

சாதனை நிகழ்த்திட்ட சாந்த நபி இவர்........!

சிறப்பாய் சீராய் வாழ்ந்திட்ட புண்ணிய சீலரிவர்….!

சீக்குகள் நிறைந்திருந்த மாந்தர்தம் உள்ளங்களை

சுத்தக் குர்ஆனின் சுகந்தம் கொண்டு நலமாக்கியவர்.....!

சூழ்ந்திட்ட துன்பங்கள் பகைகள் அனைத்தையும்

செறிந்த வீரத்தால் விவேகத்தால் வென்றவர்..!

சேதாரம் ஏதுமின்றி செழுமையுடன் இஸ்லாம் வளர்த்தவர்..!

சொல் செயல் எண்ணத்தை தூய்மையாய் வைத்துக் கொண்டவர்..!

சோக அனுபவங்களையும் சுகமான வரலாறுகளாய் மாற்றியவர்...!

செளஜன்யமும் சமாதானமும் வாழ்வு நெறியாகக் கண்டவர்..! _ இம்மையின்

சஃக்ராத்து வேளையிலும் உம்மத்தாம் நம் கவலை கொண்டவர்...!

எங்கள் நபி நாதர்…….ஏந்தல் முஹம்மது அவர்கள்..!

சாந்தியும் கருணையும் தம் மீது இறையோனால்

என்றும் மழையாக இறைக்கப் பெறும் சீமானாம்

மதீனாவில் வாழுகின்ற மாண்புயர் கோமானாம்

பாராளும் மன்னரெங்கள் அஹமதின் பாதங்கள் மீது

பாசத்துடன் சமர்ப்பிப்போம் பணிவான நமது ஸலவாத்துகளை...!



Sunday, February 19, 2012

நபி புகழ் பாடுவோம்...நன்மைகளைத் தேடுவோம்


நபி புகழ் பாடுவோம்...நன்மைகளைத் தேடுவோம் 

ண்மணியாம் எங்கள் ரசூல் நாயகமே...!

காசு பணம் நீங்கள் சேர்க்கவில்லை மேதினி வாழ்வினிலே ...

கிழிந்த ஓலை விரிப்புதான் தங்கள் படுக்கை 

கீறல் நிறை மண் குடிலே தங்கள் மாளிகை -இவ்வாறான 

குவலயம் போற்றிடும் தங்கள் எளிமை வாழ்க்கை .

கூறிச் சென்றீர்கள் குர்ஆனும் தங்கள் வழிமுறையும் இனிதாய் -எனினும் 

கெட்ட எமதுள்ளங்களில் அவை நிறைந்திடவில்லை முழுதாய் -அதனாலே 

கேள்விகள் பல எழுப்புகிறோம் இன்று தங்கள் நடைமுறை மீது 

கைகழுவி விட்டோம் தங்கள் மேலான கோட்பாடுகளை 

கொள்கைகள் பலவும் கொண்டோம் சொந்தமாய் -ஆனாலும் 

கோடிகள் எமதாக்கிக் கொண்டோம் தங்கள் மூலமாய் -போலி 

கௌரவம் கண்ட இறுமாப்பில் தங்களை மறந்தோமே அண்ணலே ....!


போதுமே நபி போதம் மறந்த நமது போதனைப் புலம்பல்கள்...

போதுமே அவர் புகழ் மறைத்த நமது இரைச்சல்கள் ....இனியேனும் 

நிறுத்துவோம் இவையனைத்தையும் உண்மை நபிநேசம் கொண்டு 

செலுத்துவோம் நம் சிந்தனையை இறைத்தூதர் வழிமுறை கண்டு 

புண்ணிய வேந்தராம் புகழ்நிறை அஹமதாம் 

மண்ணிலே வந்துதித்த மாந்தர்க்கெல்லாம் மன்னராம் 

கண்மணி எமதருமை நாயகப் பொன்மணியின் 

கண்ணியம் போற்றிடுவோம் வாருங்கள் தோழர்களே....!


Friday, February 17, 2012

கடையநல்லூர் .....அந்த நாள் ஞாபகம்


கடையநல்லூர் .....அந்த நாள் ஞாபகம்

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு எங்கள் வீடு தரமூடாக (கைத்தறி 
ஜவுளி தரகனார் வீடு) இருந்த காலம்.
தெருவில் உள்ளவர்கள்,சொந்தக்காரர்கள் என நெசவு செய்பவர்கள் (தறிகாரர்கள்) நூல் கழிகளை வாங்கிச் செல்வர்.பின்னர் அதைப் பாவோடி, பாவு ஆத்துவர்.அப்போது சாம்பு குறி குத்த கயிறு கட்டிய மை பாட்டிலையும் டேப்பையும் எடுத்துக் கொண்டு வாப்பாவுடன் ஒன்றிரண்டு முறை போனதும் 

நெசவு செய்து தறிகாரர் கொண்டு வந்த சாம்புகளை வாப்பா பூதக் கண்ணாடி வைத்து நூல் அளவிட்டு பார்த்த பிறகு கடை ஊழியர்கள் அதைக் கறந்து கைலி மடிகளாக தயார் செய்து பின்னர் கைலிகளாகக் கிழித்து பசை போட்டு தேய்க்க வைத்து மடித்து லேபில் ஒட்டி பின்னர் கைலிகளை(கர்சீப் என்றால் ஒரு டசன் கர்சிப்களை ) பாலிதீன் கவரில் இட்டு மெழுகுவர்த்தி கொண்டு இளக்கி சீல் செய்து அடுக்கி ஒலைப்பாய்களில் பார்சல் செய்து பிரஸ்ஸில் வைத்து அமுக்கி கயிறு கொண்டு கட்டி ,சாக்கு கொண்டு சிப்பங்களாக்கி ஊசி நூல் கொண்டு தைத்து மையால் பெயர் எழுதி ABT பார்சல் லாரி சர்விஸ் மூலம் ஈரோடு ,கரூர்,காயல்பட்டினம், நாகூர்,மதுரை ,ஒட்டன்சத்திரம் போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைத்ததும் 

அனுப்பி வைத்த சரக்குகளுக்கு பணம் வசூல் செய்ய வாப்பா அவ்வப்போது போய் வந்ததும் ,ஈரோடு, கரூர் போய் வந்தால் மணப்பாறை முறுக்கு ,நாகூர் போய் வந்தால் கலர் பூந்தி, காயல்பட்டினம் போய் வந்தால் கலர் அல்வா ,மதுரை போய் வந்தால் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடை இனிப்புகள் வாங்கி வந்ததும் ,அதற்காக பிள்ளைகள் நாங்கள் காத்திருந்ததும் இன்னும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளன.

அந்தக் காலத்தில் எமதூரில் கைத்தறி ஜவுளி வியாபாரம் நல்ல வருமானம் தரக் கூடிய தொழிலாக இருந்தது.தறிகாரர்களுக்கும் வருமானம் மனதுக்கு நிறைவாக கிடைத்துக் கொண்டிருந்தது.பின்னர் நாளடைவில் விசைத்தறிகளின் வரவால் அது சீரழிந்து விட்டது.வருமானம் குறைந்ததால் பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்கு எமதூர் சொந்தங்கள் (நான் உட்பட) படை எடுத்த காரணத்தால் கைத்தறிகள் போன்ற குடும்பத் தொழில்கள் அனைத்தும் முடக்கப் பட்டன.அதன் பின் இப்போது வரை உள்ள நமது நிலைமை அனைவரும் அறிந்ததே .

ஆனாலும் அந்தக் காலத்தில் குறைந்த வருமானமாக இருப்பினும் அதில் கிடைத்த மகிழ்ச்சி ,நிம்மதி ,மன நிறைவு மட்டும் பணம் தாராளமாகப் புரளும் இந்தக் காலத்தில் கிடைக்கவே இல்லை.காரணம் அப்போது வருமானத்திற்கேற்ப தேவைகளை வைத்துக் கொண்டோம் .ஆனால் இப்போது வருமானம் அளவுக்கு அதிகமாய் வர வர நம் தேவைகளின் ஏற்றமும் உயருகிறது.நமது உழைப்புச் சுமை கூடுகிறது.மனம் நொந்து வாடுகிறது .முன்பு பிழைப்பிற்காக வெளிநாடுகள் செல்லத் துவங்கிய நாம் இன்று ஊரில் நமது சுய கௌரவத்தை நிலைநிறுத்த வேண்டி மட்டுமே வெளிநாடு சென்று கொண்டிருக்கிறோம்.இருப்பதைக் கொண்டு சிறப்பிக்கும் திருப்தியடையும் நல்ல மனது நம்மிடம் இன்று இல்லை.அயல் நாட்டு வரவுகளில் நாம் இழந்த வாழ்க்கைகள்,உறவுகள் ,உணர்ச்சிகள் எண்ணில் அடங்காதவை.எனினும் வெளி நாட்டு மோகம் நம்மை ஆட்டிப் படைக்கிறது.மீண்டும் மீண்டும் பாஸ்போர்ட்களை கையில் பிடித்து நடக்க வைக்கிறது.

இதோ ...இப்போது கூட" பழங்கதை பேசியது போதும் .....கதைகளால் கரன்சி கிட்டாது ...போய் பிழைக்கிற வழியப் பாரு....பிளைட் டிக்கட் கன்பாம் ஆயிடுச்சான்னு போயி பாரு " என்று பெற்றோர் விரட்டுவது காதில் விழ இத்துடன் இக்கட்டுரைக்கு வைக்கிறேன் முற்றுப் புள்ளி .

நட்புடன் 
அபுஸாயிமா 

Wednesday, February 15, 2012

மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்



மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்

சாலைகளில் செல்லும்போது சாலையோர விளம்பரப் பலகைகளைக் கவனித்திருப்பீர்கள் இவ்வாறு "வன வளம் பேணுவோம்,மழை பெறுவோம்" என்று ....இன்னும் சில நாட்களில் "நம் மன வளம் பேணுவோம் ,உயிர்களைக் காப்போம் " என்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப் படலாம்.ஏனெனில் மன நலம் என்பது இன்று நம்மிடையே காணாமல் போன பொருளாகிவிட்டது.

அண்மையில் நடை பெற்ற இரு சம்பவங்கள் என் மனதை மிகவும் பாதித்தன.
மாணவனின் இடுப்பு எலும்பை அடித்தே முறித்திட்ட ஆசிரியர் -ஒன்று 
கண்டித்த ஆசிரியையின் கழுத்தைத் துண்டித்த மாணவன் -இரண்டு 
என இரு வருந்தத் தக்க நிகழ்வுகள்.இவைகளே இக்கட்டுரை எழுதத் தூண்டிய காரணிகளாகும்.

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம் ......?எண்ணிப் பார்த்தோமா...?

ஒழுக்கம் கற்பிக்கும் இடத்திற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை.ஒழுக்கம் கற்கும் இடத்திலேயே தவழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை நிலை.

குற்றம் யார் மீது என்று மூளையைக் குழப்பிக் கொண்டு வாதம் செய்ய வேண்டாம்.இனியேனும் இது போன்ற கொடுமைகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை முடுக்கி விடுவோம்.

மாணவர்களின் நலன் பேணும் வகையில் அமைந்த கீழ்க்காணும் ஆலோசனைகள் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல.மாறாக இவை அனைத்தும் முன்னோடி கல்வியாளர்களின் சிந்தனைகளாகும்.

1.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தமது சுய விருப்பத்தை திணிப்பதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.உதாரணத்திற்கு மருத்துவர் பிள்ளை மருத்துவராகவும்,பொறியாளர் பிள்ளை பொறியாளராகவும் தான் வரவேண்டும் என விருப்பப் பட்டு அவ் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது.இவ்வாறு செய்யும் போது  பிள்ளைகள் தாங்க வொண்ணா மனச்சுமைக்கு ஆளாகின்றனர்.அதனால் அவர்களின் இயல்பான மனதில் ஒரு இறுக்கம் நிறைந்து விடுகிறது.கடமைக்கு வேண்டி மட்டும் கல்வி பயில்வர்.அதில் அவர்களுக்கு கல்வித் தேர்ச்சி என்னவோ கிடைத்து விடும்.ஆனால் மன முதிர்ச்சி மற்றும் சுய ஆளுமைப் பண்புகளின் வளர்ச்சி தடைப்பட்டு விடும்.எனவே பெற்றோர் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்க முற்பட வேண்டாம்.

2.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழு நேரமும் வேலைப் பளுவில் ஆழ்த்த வேண்டாம்.உதாரணத்திற்கு காலை முதல் மாலை வரை பள்ளி,பின்னர் தனிப் பயிற்சி ,பின்னர் நாட்டியம் பின்னர் பாடல் பின்னர் மீண்டும் படிப்பு என்று அவர்கள் உறங்கும் வரையிலும் அவர்களின் மீது தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்றுவது.இதனால் அவர்கள் உடல் மட்டுமல்ல உள்ளமும் சேர்ந்தே சோர்வடைந்து விடுகிறது.எனவே பெற்றோர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்,பிள்ளைகளுக்கு தேவையான அவசியமான ஒய்விற்கென நேரம் கொடுக்க வேண்டும்.

3.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒய்வு மற்றும் விடுமுறை நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கத் தூண்ட வேண்டும்.அதே சமயம் அவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்த கணினி,இணைய மற்றும் தொலைக்காட்சி விளையாட்டுக்களை விளையாடுவதை நிறுத்தச் செய்து தம் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்.திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளில் வரும் பொம்மைப் படங்களிலும் தற்போது வன்முறைக் காட்சிகள் அதிகம் காட்டப் படுவதால் அவைகளைப் பார்ப்பதை விட்டும் பிள்ளைகளைத் தடுக்க வேண்டும்.

4.பெற்றோர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகளின் கைகளில் அலைபேசிகள் தருவதை நிறுத்த வேண்டும்.பள்ளி நிர்வாகங்கள் இது விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

5.பள்ளிகள் தங்கள் மாணவர்களை அடிமைகள் போல் நடத்தும் போக்கு முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.நூற்றுக்கு நூறு விழுக்காடு கல்வித் தேர்ச்சி மட்டும் பள்ளிகளின் குறிக்கோளாக இருக்கக் கூடாது.மாறாக தங்கள் மாணவர்கள் மாண்புயர் பண்புகளிலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவதையும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

6.பள்ளிகளில் மாணவர்களை அளவுக்கு மீறி தண்டிப்பதை நிறுத்த வேண்டும்.மாணவர்களுக்கு கொடுக்கப் படும் தண்டனை அவர்களை மனம் திருந்தச் செய்யும் படியாக மட்டுமே இருக்க வேண்டும்.மேலும் மாணவர்களுக்கு  மன நலம் வளர்க்கும் நீதி போதனை வகுப்புகள்,யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.இதுபோன்ற வகுப்புகளை ரத்து செய்து அவைகளிலும் மற்ற பாடங்கள் நடத்தும் போக்கைக் கைவிட வேண்டும்.ஏனெனில் நீதி போதனைகள் மற்றும் யோகாசனப் பயிற்சிகள் மட்டுமே மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் மன வளம் வளர்க்கக் கூடியவை என்பதை பள்ளி நிர்வாகங்கள் புரிந்துணர வேண்டும்.

7.மாணவர் ,ஆசிரியர் மற்றும் பெற்றோர் நல்லுறவு பேணப் பட வேண்டும்.பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இதை உறுதி செய்திட வேண்டும்.

8.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் ஆசிரியர்களை மதித்து நடக்கும் பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

9.ஆசிரியர்களும் மாணவர்களை தங்கள் சொந்தப் பிள்ளைகளைப் போல்   
கருதி அவர்களிடத்தில் கனிவுடன் நடந்திட வேண்டும். 

10.மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தயவு செய்து தற்போதைய கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யப் பட வேண்டும்.பாடப் புத்தகங்களில் உள்ளதை மனப்பாடமாக்கி (மூளையில் திணித்து ) அதனை தேர்வுத் தாள்களில் வாந்தி எடுக்கச் செய்து அதன் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிப்பதை நிறுத்திடல் வேண்டும்.மாறாக அவர்தம் புரிதல் திறன், வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவைகளை ஆய்வு செய்யும் விதத்தில் கல்வி முறை மாற்றப் பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட சான்றோர் சமுதாயம் இதுகுறித்து சிந்திக்குமா ?......மாணவ சமுதாயம் நல்ல மாற்றங்களைச் சந்திக்குமா....?

நல்விளைவுகளை எதிர்நோக்கியவனாக
அபுஸாயிமா 

மனிதா...ஓ...மனிதா ...நீ மாறி விடு....!


மனிதா...ஓ...மனிதா ...நீ மாறி விடு....!


நன்மையும் தீமையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்டு நானிலம் தன்னில்  நாகரீக உலா வரும் மனிதன் நன்மையை மட்டும் பிறர்க்காய் நாடுகிறானா என்றால் பெரும்பாலான பொழுதுகளில் இல்லவே இல்லை என்றே பதில் கிடைக்கும் .


மனிதன் பல வேளைகளில் தீமைகள் கொண்டே பிறரைத் தீண்டுகிறான்.அவன் மனம் முழுதும் அழுக்கான எண்ணங்கள் .அவற்றின் விளைவாய் உருப்பெறும் இழுக்கான பல செயல் வண்ணங்கள்.அவை தோற்றுவிக்கும் கருப்பான எதிர் விளைவுகள் என தாழ்நிலை நோக்கியே அவன் பயணம் முழுதும்.....


நாகரீக மோகம் கொண்டு ஐந்தறிவுப் பிராணிகளும் செய்திடாத அருவருப்பான செயல்களையும் ஆறறிவுடன் பிறந்த மனிதன் நாணமின்றிச் செய்கின்றான்......


சற்றே சிந்திப்போம்....


விலங்குகளும் நமைப் பார்த்து நகைக்கும் போக்கல்லவா ....இது......விளக்கம் கற்பிக்க இயலா விந்தையிலும் விந்தையல்லவா.........இது ?


எதற்காய் மானிடப் பிறப்பெய்தினோம்......? நாம் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்....?


சிந்தை தெளிந்து மனிதம் புரிந்திட முயற்சிப்போமா..?


நம் வாழ்வு நெறியை சற்று மாற்றி அமைப்போம் இவ்வாறு.


நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நிர்வாண ஆடை வேண்டாம்
நகை சுமக்கும் காட்சிப் பேழையாய் நம் பெண்கள் நடக்க வேண்டாம்  
புன்னகையில் பொன்னகை செய்வோம் 
கனிவுப் பேச்சினில் பிறர் உள்ளங்கள் வெல்வோம் 
மதங்கள் நம்மை நெறிப்படுத்தட்டும் நல்ல மனிதர்களாய் 
மதம் கொண்டு நெறி தவற வேண்டாம் நாம் மிருகங்களாய் 


வாழும் நாட்களை தீமைகளில் பாழாக்காமல் என்றும் நன்மைகளை சேமிப்போம் ..
மனித நேயம் வளர்ப்போம்..பொதுநலம் பேணி மானுடம் காப்போம்
நல்லவை விரும்புவோம்.அல்லவை தவிர்ப்போம் 
இக பர வாழ்வை வெல்வோம்.



வாருங்கள் தோழர்களே...!



நெஞ்சு பொறுக்குதில்லையே.......


நெஞ்சு பொறுக்குதில்லையே.......


அய்யா சமுதாயக் கனவான்களே ,


கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் உங்கள் கண்ணான பிள்ளைகள் மீது.......


பெற்றோம் ......வளர்த்தோம்..... படிக்க வைத்தோம்... திருமணம் முடித்தும் வைத்தோம் ..... அத்துடன் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா ....?


அதுதான் இல்லை 


கொஞ்சம் இந்த நாகரீகம் நாறிப் போன சமுதாயச் சூழலை எண்ணிப் பாருங்கள்.....நிச்சயம் நமது கடமை பகுதி கிணற்றில் தொங்கிக் கொண்டிருப்பது நன்றாகப் புலப்படும்.


அனைத்துத் துறை கல்வியும் கற்பித்து மணமுடித்தும் வைத்த நம் பிள்ளைகளுக்கு இன்னும் கற்பிக்கப் படாத கல்வியாய் கற்பு நெறி ஒழுக்கம் இருப்பதை நாம் கண் கூடாகக் காண முடியும்.


மணம் புரிந்தும் மணாளனின் 
மனம் புரியாது மாற்றானின் துணை நாடும் மங்கையர் சில பேர் ......


நெருக்கமாய் காட்டிக் கொண்டும் 
நெஞ்சினுள் வஞ்சம் வைத்தே 
மிஞ்சிப் படியும் தாண்டிடும் மிகைத்த மாதர் சில பேர் .......


நேற்று வரை நல்லவனாய் நடமாடிய 
அண்டை வீட்டு அழகு வாலிபன் 
பிறர் மனை கூடி ஓடிய கேவலச் செயலால் 
இன்று ஊரார் வாய் முழுக்க 
மெல்லப்படும் அவலானான்.


அவலம்......பெரும் அவலம் .....


கற்பு,ஒழுக்கம் ,கண்ணியம் என்பதை இனி 
அகராதியில் மட்டுமே காணமுடியும் போலிருக்கிறது.


அடுத்த தெரு வரை நெருங்கி வந்த ஆபத்து வெள்ளம் 
நம் சொந்த வீட்டினை அடையுமுன் உரிய பாதுகாப்பினை உறுதி செய்வோம். 


பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்போம் 
அவர்தம் சுய ஒழுக்கமும் பேணிட வைப்போம்.


இவ்வாறெல்லாம் நினைக்கும் படி வைத்திட்ட இழியோர் 
சிலரின் செயல் கண்டு 
நெஞ்சு பொறுக்குதில்லையே........!

சோகமும் மேகமும்

Sun and Rain :} Pictures, Images and Photos

சோகமும் மேகமும்

உச்சி வெயிலில் வெகு தூரம் நடந்த களைப்பில் 
வழியில் கண்ட திண்ணையில் அமர்ந்தேன்.


வியர்வையில் உடல் குளித்த மணம்
நாக்கு வறண்டு நலிந்திருந்த அந்தத் தருணம்...


தாகம் தீர்த்திடத் தண்ணீர் தேடிய வேளையில் 
எங்கிருந்தோ பறந்து வந்த கூரிய கல்லொன்று 
என் இடது கன்னத்தைப் பதம் பார்த்தது..
கன்னத்து சதையை இடம் பெயர்த்தது.....! 


கன்னத்திலிருந்து குருதி மழை....!
வேதனையில் 
கண்களிலிருந்து கண்ணீர் மழை...!


சோக மேகங்கள் எனைச் சூழ்ந்த அவ்வேளையில் 
வான மேகங்கள் சூரியனைச் சூழ்ந்து மறைத்தன.. 


வறுத்தெடுத்த சூடுகதிர்களை வழியனுப்பிவிட்டு 
வானம் வரவேற்கத் துவங்கியது இருளை... 


கறுத்த மேகங்கள் கை கோர்த்தன ...
மின்னல் வெட்டியது...
இடி முரசாய்க் கொட்டியது...


இப்போது 
வானம் ஆர்ப்பரித்து அழுகிறது மழையாய் 
எனக்காக ......
என் சோகம் முழுதும் உள்வாங்கியது போல் ........
-------------------------------------------------------------------------------------------------------------

பாவத்தின் பரிதாப ஓலம்


பாவத்தின் பரிதாப ஓலம் 




கற்பனைகள் என்னுள் பற்பலவாய் கனிந்தாலும்
கவிதையாய் அவை கருக்கொள்ள மறுக்கின்றன.


சிந்தனைகள் பலவும் எனை செதுக்கிடத்தான் வந்தாலும் 
நிந்தனைகளாகவே எனக்கவை நித்தமும் தோன்றுகின்றன. 


ஏனிந்த இயலாமை..? 
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
விளங்கியது விந்தை இன்று...
மனம் போன போக்கில் நடக்கின்றேன்.....ஆம் 
மனோ இச்சையின் பிடியில் இருக்கின்றேன்...


மனிதம் மறந்தும் மரத்தும் போய்விட்ட 
மாக்களின் உலகில் நானும் ஓர் அங்கமாகிவிட்டேனே...என்செய்வேன்? 


சொன்னார்கள் நபிநாதர் அன்றே
எண்ணம் சொல் செயல் தூய்மையே 
மனிதனை புனிதனாக்குமென்றே.....


செருக்கால் அதை விடுத்து
சுகபோக வாழ்வில் லயித்து 
சீர் கெட்டுப் போய்விட்டேன்.....அந்தோ!


மருந்தென்ன இந்நோய்க்கு?.......


மாநபியின் வழிநடந்து 
நப்செனும் இச்சையை 
நசுக்கிக் கொன்று....


அன்பெனும் உரமிட்டு 
பேதமெனும் களை நீக்கி 
மனித நேயமெனும் நீர் வார்த்து........அதனால் 
செழித்தோங்கும் மனிதமெனும்
விருட்சம் வளர்ப்போம் 
வாருங்கள் தோழர்களே....!








----------------------------------------------------------------------------

புதுக்கவிதை


இது பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது 
துள்ளி எழுந்த எண்ண அலைகளையெல்லாம் 
எழுத்தில் கரை சேர்க்க முயற்சித்தபோது 
முதல் பிரசவமாய் கனிந்தது......


புதுக்கவிதை


இது.........
வார்த்தைகளால் தீட்டப்படும் வண்ண ஓவியம்
வர்ணனைகள் பலநிறைந்த வசந்த காவியம்
கருத்துமலர்களால் கோர்க்கப்படும் கதம்பம்
மனம் கொண்ட கற்பனையின் மறுபிம்பம்
அளவில் குறுகியும் ஆழமாய்ப் பொருள் விளக்கும்
நடையில் நீண்டும் நளினமாய் சுவை நல்கும்
சுருங்கக் கூறின்
புதுக்கவிதை.......
இது 
மரபுகளால் இன்றும் மடக்கப்படாத ஒரு பாவகை
பன்மலர்ச் சோலையில் என்றும் வாடாதிருக்கும் ஒரு பூவகை.
-----------------------------------------------------------------

முரண் சிந்தனை


பள்ளிப் பருவ சிந்தனைகள்....... தொடர்கின்றன.


முரண் சிந்தனை


வீதி வழி சென்று கொண்டிருந்த என் பார்வையில் 
பாதை நடுவில் அசையாதிருந்த கூரிய கல்லொன்று பட்டது.
பாத சாரிகளின் நன்மை கருதி அதைப் 
பாதையோரம் பணித்திட எண்ணினேன்...


கல்லை நோக்கி குனிந்திட்ட என்னை 
கண்டனக் குரலொன்று தடுத்திட்டது...
"ஏன்டா இந்த வயதிலுமா 
இந்த சிறுபிள்ளை விளையாட்டு?"


குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்திட்டேன்.... 
கண்டனத்திற்கும் கடும் குரலுக்கும் காரணம் புரிந்தது ..


குரல் தந்தவர் அருகில் குட்டி நாய்கள் இரண்டு!...........


என் சொல்வேன் என்னிலையை? 
------------------------------------------------------------------

புறாக்கள் கற்பிக்கும் ஒற்றுமை!...நமது இன்றைய தேவை !



புறாக்கள் கற்பிக்கும் ஒற்றுமை!...நமது இன்றைய தேவை !

அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சியில் 
அழகுற அமர்ந்திருக்கும் வெள்ளைப் புறாவே ....!

சமாதானத்திற்க்கேன் உனைச் சமானமாய்ச் சொன்னார்கள்....?
அமைதிக்கேன் உன்னை அடைமொழியாக்கினார்கள் ...?

என் எண்ண ஓட்டம் நின்றது விடை கண்டு ...ஆம் 

நீ உன் அருகிருக்கும் பல்வேறு நிறத் தோழர்களுடனும்
அன்புடன் கூடி உறவாடுகிறாய் ஒற்றுமையாய்.

தலைக்கனமில்லை கர்வமில்லை உங்களிடத்தில் 

நிறவேற்றுமை உங்கள் இன ஒற்றுமையைக் கண்டுதான் ஓடி ஒளிந்ததோ......!

நீ உன் வெண்மை நிறத்தில் பல உண்மைகளை உணர்த்துகிறாய். 
ஆனால்.....
எங்கள் பழுதுநிறை மூளைகளில் தாம் அவை பதிவதாய் இல்லை.

அதனால்தான் நாங்கள் ஆளுக்கொரு இயக்கம் வைத்து 
அணி அணியாய் வேறு பட்டு கூறு பட்டு 
வேரறுந்த மரங்களாய் வலுவிழந்து நிற்கின்றோம் .....

அமைதியை நிலை நாட்டுகிறோம் என்பதன் அடையாளமாய் 
அடிக்கடி விழா மேடைகள் தோறும் உன் கூட்டத்தினரைப் 
பறக்க விடுகின்றோம் ......இவ்வாறு 

அமைதியை உம்முடன் பறக்க விடுவதாலோ என்னவோ 
அடுத்த நிமிடமே நாங்களிங்கு அடித்துக் கொள்கிறோம் ....!!

என்ன செய்வது எந்தன் மணிப்புறாவே...?

எனினும் நீ வருந்தாதே வண்ணப்புறாவே.....!

பழுதுநிறை மூளைகள் பழுதனைத்தும் நீங்கி 

புதுப்பொலிவு பெறும் காலம் விரைவில் வரும் ...அதற்காய் 

காத்திருப்போம் நாமிருவரும் கவின்புறாவே......!


"விழுதுகளை விழுங்கும் வேர்கள்"


இது கல்லூரியில் பயின்ற காலத்தில் எழுதியது
தலைப்பு தரப்பட்டு
முதன் முதலாக
தலைப்பிற்காய் எழுதியது.........

"விழுதுகளை விழுங்கும் வேர்கள்"

அன்னையின் அலறல்... கூடவே
மழலையின் முதல் அழுகை ஆரம்பம்

சுற்றமும் சூழ வந்து விசாரித்தது
என்ன குழந்தையென்று...?

பிரசவம் பார்த்திட்ட செவிலி சொன்னாள்
பெண் குழந்தையென்று.......

கேட்டதும்
சுருங்கிப் போயிற்று
சுற்றி நின்றவர் முகங்கள்
பெற்றவள் உட்பட .....

அடுத்த சில மணிகளில்
அம்மழலை எருக்கம் பாலில் எமனைக் கண்டது ....ஆம்
அக்குழந்தை மரணித்தது ....

இவ்வாறு
பெற்ற குழந்தையைப் பெண்ணென்பதால்
பலியிடத் துணிந்திட்ட அந்தப் பெற்றவள்
மற்றும் அவள் போன்றோர் இங்கு
விழுதுகளை விழுங்கும் வேர்கள்....

இவ்வேர்கள் உணரவில்லை
தாங்கள் விழுங்குவது விழுதுகளை அல்ல
தம்போன்ற வேர்களையே என்று

கொடுங்குற்றம் தனைப் புரியும் இவர்கட்கு
இனியேனும்
விளங்கட்டும் இதுவே உண்மை என்று .....
----------------------------------------------------------------

எனதூர் கடையநல்லூர்!.


எனதூர் கடையநல்லூர் !. 

பெயர்க்காரணம் மட்டுமல்லாது
பிறந்து வாழும் மக்கள் செயலாலும்
என்றும் நல்லூராய்த் திகழும் எனதூர்
ஏனோ சில காலமாய்
மனம் வெதும்பி அழுகின்றது
எங்கே தன் நற்பெயர் நழுவிவிடுமோ என்று....
என்ன காரணம் ......?

இதோ....

பண்டைக் காலம் தொட்டு
நீதி நெறியும் கற்பு நெறியும்
வழுவாத மக்களால்
நிறைந்து காணப்பட்ட எனதூரில்
சமீப காலங்களில்
நாகரீக மாற்றத்தால் ஏற்பட்ட
ஒழுக்கக் கேடுகள்......

சுருங்கக் கூறின்
இன்று எனதூரில்
கடனுக்கு வட்டியாய்
கற்பும் நியாயமாகிப் போனது.........
கள்ளக் காதலும்
ஓடிப் போகலும்
தினசரி நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

வேறென்ன வேண்டும் எனதூரின்
பெயர் கெட்டுப் போவதற்கு...?

எங்கே போயினர் எனதூரின்
கண்ணியம் நிறை கனவான்கள்...?

அவர்களின் சுய கண்ணியக் குறைவால்
கண்டும் காணாதிருக்கிறார்களா......?

எங்கே போயின எனதூரின்
எழுச்சி நிறை இயக்கங்கள்......?

பெயரில் மட்டுமே இயக்கம் கொண்டு
முடங்கிப் போய் விட்டனவா...?

இந்த துயரமான சூழலில்
நாம் செய்ய வேண்டியதென்ன.....?

எனதூரின் இனிய சொந்தங்களே
சற்று சிந்திப்பீர்....

இப்போதுள்ள மக்களையும்
இனிவரும் சந்ததியையும் பாதுகாத்திட
இனியேனும் முயற்சி செய்வோம்

எவ்வாறு....?

நம் பிள்ளைகளுக்கு
உலகக் கல்வியுடன்
மார்க்கக் கல்வியும்
முறையாய்க் கற்பிப்போம்

பள்ளி செல்லும் பிள்ளைகளிடம்-
பணிவாய் நடக்கச் சொல்வோம்

கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு
கற்பு நெறி வழுவா ஒழுக்கம் கற்பிப்போம்

பாசமில்லா ஆபாசமெனும்
பாவி ஷைத்தானின்
வலையில் வீழாது
கவனமாய்க் கண்காணிப்போம்
கயவர்களின் காம வலை வீச்சிலிருந்தும்
பாதுகாப்போம்......

பருவ வயதுப் பிள்ளைகள் மற்றும்
வீட்டிலுள்ள பெண்களிடம்
தொல்லை தரும்
தொலைக்காட்சி,
தொலை பேசி மற்றும்
அலை பேசிகளின்
கேடு குறித்தும்
எடுத்துரைப்போம்.....
திருந்தாவிடில்
இடித்துரைப்போம்,

இவ்வாறெல்லாம் முயற்சி
செய்தால்
பிற்கால சமுதாயத்தை
பிறரின் ஏளனத்திலிருந்து மட்டுமல்ல
நமது சமூகச் சீரழிவிலிருந்தும்
பாதுகாக்கலாம்....
நினைவிருக்கட்டும்.......
நாளை மறுமையில்
இறைவனின் முன்னிலையில்
நாம் அனைவரும் பதில்
சொல்ல வேண்டி வரும்
நமது பொறுப்பில் உள்ளவர்க்கும் சேர்த்து ......
எனவே
சிந்திப்பீர்
கவனத்துடன்
விரைந்து
செயல்படுவீர்...

இந்த வேண்டுகோள்
எனதூர் வாழ் மக்களுக்கு மட்டுமல்ல
எல்லோர்க்கும் தான்....

ஏனெனில்
இன்று நாங்கள்
நாளை நீங்கள்....
எல்லோரும் ஓர்நாள்
இறைவனிடம்.........

----------------------------------------------------------------------------

பாங்கோசையில்..........


பாங்கோசையில் அழகாய் முஹம்மது நபியின் பெயர் கேட்டதும்
பாங்காய் இரு பெருவிரல் நகம் முத்தி 
பரிவுடன் கண்களில் ஒற்றிக் கொள்வோம் ......
இச்செயல்........

மஹ்மூது நபியின் மங்காத நூர்தனை 
ஆதமில் வைத்து அனுப்பியதன் சாட்சி 

 இதை வழமையாய் செய்து வருவோருக்கு 
ஒருபோதும் மங்காது கண்களின் காட்சி....
-----------------------------------------------------------------






அனுபவிப்போம்....


அனுபவிப்போம்....

வியர்வை சிந்தி நெய்து வேட்டிகளாய் மாற்றினோம்.......
பணம் கை வந்த போது இனித்தது.......நெஞ்சம் நிறைந்தது 

கைத்தறிகளனைத்தும் முடக்கி கல்ப் வளைகுடாவில் வீசினோம்......
நிம்மதி போனது.......நொம்பலம் பலவும் இலவசமாய் கிட்டின ...... 

வேண்டி விரும்பிப் பிடித்ததல்லவா....
வெளி நாட்டு மோகம் 
விட்டு விட வேண்டாம் 
கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வோம் ........
----------------------------------------------------------------------------




புரிதல்......புதிரானது


புரிதல்......புதிரானது 

பனித் துளியின் பரிசுத்தம் அறியா புல்வெளியாய் 
நிலவின் ஒளிப்பெருமை அறியா மேகமாய் 
தன்னை அசைத்திடும் காற்றை சாடிடும் மரமாய் 
இறுதி வரை என்னைப் புரிந்து கொள்ளாமலே நீ.....!


நாளை நடப்பதை நானறிந்தது போல் 
என்மேலென்ன அப்படிக் கோபம் ....?
நனைந்த என் துவாலையும் 
நாசூக்காய் உணர்த்தவில்லையோ 
நம் பிரிவின் சோகம்......?


இனியேனும் நாமிருவரும் 
கடலினில் சங்கமிக்கும் 
நதிகளாய் பரிணாமம் அடைவோமா ...?
இல்லை 
மணித்துளியில் மறைந்திடும் நீர்த் திவலைகளாய் உடைவோமா...?
---------------------------------------------------------------------

தோல்வியில் மனிதன்


தோல்வியில் மனிதன் 


வனவிலங்குகள் அனைத்தும் அடக்கி 


வாகை சூடிய இறுமாப்புடன் மனிதன்.........


பாவம் அவன் உணரவில்லை 


அவனின் மனவிலங்கு 


தன்னை அடக்கவில்லையே என எண்ணிச் சிரித்ததை.......
----------------------------------------------------

மவுனமும் இங்கு சாதிக்கும்



மவுனமும் இங்கு சாதிக்கும்



இருக்கும் இடமறிந்து 
பேசப் பழகிக் கொண்டால் 
மௌனமொழியும் சில சமயம் 
விந்தைகள் செய்யும் மந்திரக் கோலாகும்......



தொடங்குவோம் முதலில் இந்தச் சோதனை......


தொடங்குவோம் முதலில் இந்தச் சோதனை......


வாழ்க்கையில் விரக்தி 
முயற்சியில் அயர்ச்சி 
மனத் தடுமாற்றம் 
கொள்கை குழப்பம்
நோவு நொம்பலங்கள்
நொடிந்த வாணிகம் 
வருத்தும் வறுமை.......


இத்தனை இயலாமைகள் ,இல்லாமைகள் ஏன் ...?
விதியின் சதியென்று விலக்காதீர்........
பொழுதை வீணாய்க் கழிக்காதீர்.....


கல்வியின்மை ,ஆர்வமின்மை,முயற்சியின்மை ,திறமையின்மை 
என நம் இன்"மை" களின் எண்ணிக்கை ஏற்றம்தான் காரணங்கள் 


தொடர்ச்சியாய் நம்மைச் சூழ்ந்திடும் 
சோதனைகள் வேதனைகள் அனைத்தும் மாறிட 
முதலில் சுய பரிசோதனை செய்து கொள்வோம்


இன்மைகள் அனைத்தும் இல்லாமலாக்குவோம்
தோல்விப் படிகளேறி வெற்றிக் கனி பறிப்போம் 


தொடங்கட்டும் இன்று முதல் சுய பரிசோதனை 
வரலாற்றில் நாளை பதிவாகட்டும் நம் வாழ்வின் சாதனை.
----------------------------------------------------------------------------

உழைப்பும் களைப்பும்



அடுத்தவர் சொத்தை வளைத்துப் பிழைக்கும் இக்காலத்தில் 
சொந்தக் கைகளால் உழைத்துப் பிழைக்கும் இவர்போன்றோர் 
நியாய வாழ்வின் நிதர்சன உவமைகள்.....


உழைப்பின் களைப்பினால் வந்த உறக்கம்- அதன் சுகம் 
ஒரு கோடி கொடுத்தாலும் கிட்டாது
உண்டதற்காய் உறங்கும் நமக்கும்
----------------------------------------------------------------------------

கிழிசல்களைத் தைப்போம்


கிழிசல்களைத் தைப்போம் 


நாடுகளிடை நடக்கும் பனிப்போர் போல் 
நம்மில் தம்மிலும் தீராத சிறு சிறு உரசல்கள் 


நாகரீக நயவஞ்சகத்தில் நைந்திட்ட அவைகள் 
நம் மானம் புறத்தாக்கும் கிழிசல்கள் 


கொள்கையில் ஒற்றுமை
கருத்துகளில் வேற்றுமை 


கொண்ட நிலையில் பிடிவாதம்   
கீழிறங்கி வராத(து) படி கடும் நீளம் 


தனித்துப் பிரிந்த ஆடுகள் போல் 
தவிக்கிறது சமுதாயக் கூட்டம் 


பிரித்தாளும் சூழ்ச்சி வென்றதில் 
பகையோர் போடும் ஆட்டம் 


ஆராய்ந்தோம் அனைத்தையுமென்றோம்
வாதத் திறத்தால் வாய்மையைக் கொன்றோம் 


அணி அணியாய்ப் பிரிந்தென்ன கண்டோம்....?
அடிப்படை உரிமைகள் தகர்ந்ததை மட்டுமல்லவா 
இறுதி அறுவடையாக்கிக் கொண்டோம்.


சொந்தக் கொள்கைகளைத் திணித்தோம்-முரண்
கொண்ட உண்மையைத் தலை துணித்தோம்


பொய்களில் கல்லாவை நிரப்பியது போதும்- இனியேனும் 
கல்புகளில் அல்லாவைப் பதிந்திடுவோம் நாமும்


நபிகளின் சுன்னத்தை மேன்மையாய் நாடுவோம் 
நன்மைநிறை ஜன்னத்தை நற்செயல்களில் தேடுவோம் 


போதும் நம்மிடை இயக்க உருவாக்கங்கள்- கொண்ட 
பொதுக் கொள்கையில் முதலில் ஒற்றுமை உருவாக்குங்கள்.


குறுக்கும் நெடுக்குமாய் வளைந்து குணமென்ன கண்டீர்...?- சமூகம் 
வெறுக்கும் முன் ஒரு நிலைப்பாட்டில் அடங்குவோம் வாரீர்.
-----------------------------------------------------------------------------------------------------------------

இவனைக் கண்டு கொள்ள(கொல்ல) அருள் புரிவாய் இறையோனே ...


இவனைக் கண்டு கொள்ள(கொல்ல) அருள் புரிவாய் இறையோனே ...


இறையோனை முற்றிலும் மறந்து 
இறைத் தூதர் கட்டளைகள் துறந்து 
இச்சையின் வழிப் போக்கில் பறந்து 
இழியூர் தன்னில் நிற்கிறது நம் சமுதாயப் பருந்து


காரணம் ஆயிரம் கண்டது மண்ணும்- எனினும்
கருவியாய் இவன் ஒருவன் இலங்கியது மின்னும் 
கல்புகளின் நேரோட்டம் இவனால் தான் பின்னும்
கலங்க வைத்தே தன்வசப்படுத்தும் கலையில்தான் இவன் கண்ணும் 


இவன் சுய சரிதை இப்போதுதான் வந்தது வெளிச்சத்தில் 
இதை நன்றாய்ப் பதிந்து கொள்வோம் நம் தலைச் சத்தில் 
இகமும் பரமும் வெல்வோம் மொத்தத்தில் 
இழிகுணங்கள் ஏதுமற்ற உளச் சுத்தத்தில் 


இறை முனிவால் மண்ணகம் எட்டிய எத்தன் இவன் 
இன்பச் சுவை காட்டி ஆதி பிதாவை வீழ்த்தியவன்
இறைத் தூதர்தம் மனச் சலனம் உண்டாக்கியவன்-எனினும் 
இவரிடம் தோற்றுடைந்து பெருங்கூட்டமாய் உண்டாகியவன் 


தட்டுப்பாடின்றி கிட்டும் கள்ளப் பணம் 
தடுமாறி அலையும் கள்ள மனம் 
தவறை மட்டும் உட்கொள்ளும் கபட குணம் -இவையனைத்தும் 
தவறாமல் இவன் அமரும் சிம்மாசனம் 


இவன் காலமாற்றத்தில் கொண்ட கோலங்கள் பலதாகும் 
இணையமும் கணினியும் இவன் தூதர்களில் சிலதாகும் 
இல்லம் நிறை தொலைக்காட்சிகள் இவன் படைக்கலன்களாம் 
இன்னல் நிறை தொலை,அலைபேசிகள் இவன் அணிகலன்களாம்


பார்வையில் தடுமாறிட ஆபாசப் போர்வை விரிக்கிறான் 
பண்புளோர் எண்ண நூற்களில் பொய்க் கயிறு திரிக்கிறான்
பவ்யமாய்ப் பேதைப் பெண்டிரை இவன் வழி கெடுக்கிறான் 
பருவக் கிளர்ச்சியில் மயங்கிப் படி தாண்டிட வைக்கிறான் 


இன்னும் முடியவில்லை இவன் சுய சரிதைக் கதைகள் 
இன்றும் நிற்கவில்லை இழிந்த இவன் லீலைகள் 
இப்லீஸ் எனும் பெயருள்ள சைத்தான் தான் இவன்-நம் 
இரத்த நாளங்களிலும் உறங்காது ஓடிக் கொண்டிருக்கிறான் 


விக்கிடும் இக்கட்டில் இப்பாவியின் பிடி சிக்கியுள்ள நாம் 
விடுபடும் வழி இறையோனிடம் இறைஞ்சுவது தாம் 


விண்ணோர் மண்ணோர் வணங்கிடும் இறையே !
விஞ்சி எம்மில் நிறைந்திருப்பதனைத்தும் குறையே 


அஞ்சி உன்னிடமே அடைக்கலம் நாடுகிறோம் 
அழுது கெஞ்சியே உன் அபயமும் தேடுகிறோம்


விரித்த எமது கரங்களில் உனதருள் நிறைத்திடுவாய்-நிரந்தரமாய் 
வீணன் சைத்தானை விலங்குகளில் பிணைத்திடுவாய்


இணையில்லா மறையும் கறையில்லா கனி நபியும் 
இனிதே எமக்களித்த துணையில்லா தூயோனே
எவர் எமைக் கைவிடினும் 
எமக்கு என்றும் நீயே காப்பு.
----------------------------------------------------------------------------

பணம்...அதன் குணம்

பணம்...அதன் குணம் 


பணக் காற்று வீசத் தொடங்கினால்..... 
சிம்மாசனமும் ஆட்டம் காணும் .

பணம் உயிர் கொண்டால்....... 
பாசம் செத்துப் போகும். 

பணம் வெளிச்சத்தில் கண்டால்......
மானம் இருளில் தொலைந்து விடும்.
----------------------------------------------------------------------------




உயர்ந்த உள்ளங்கள்




மேலே காணும் படம் குறித்த எனது பார்வை: 


கழிவுகளை சுத்தப்படுத்த தம் நிலை தாழ்ந்த இவர்களும் உயர்ந்தவர்களே....
அவர்கள் கீழிறங்கியதால் தான் நம்மால் மேலே நாறாமல் நடமாட முடிகிறது. 
எனவே அவர்களும் போற்றுதற்குரியோராம்.
கெட்டிக் கிடந்து நாறிய கழிவு நீரோடை இவரால் சுத்தமானது இப்போது ......
கெட்டவர்களால் நாறும் நம் சமூக ஓடை சுத்தமாவது எப்போது....?
----------------------------------------------------------------------------

மாநபியே எங்கள் ஸலாம்


மாநபியே எங்கள் ஸலாம் 
மண்ணகமும் போற்றுதே! ....தங்களை 
விண்ணகமும் போற்றுதே! 
கண்மணி ஆமினா ஈன்றெடுத்த கனியமுதே....!
கவிஞர்கள் பாடிடும் கறையில்லா மஹ்மூதே....!
புண்ணியம் செய்ததால் உங்கள் உம்மத்தானோம்....இருந்தும் தங்களை 
கண்ணியம் செய்வதில் ஏன் ஊமைகளானோம்.....? 
எம்மை மன்னியுங்கள் மாமன்னரே!
எங்கள் உயிர்கள் அனைத்தும் தங்களுக்கே அர்ப்பணம் 
ஏற்றிடுவீர் எமது சலாமனைத்தும் தங்களுக்கே சமர்ப்பணம்....
யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...! 
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
ஸலவாதுல்லா அலைக்கும்...!
----------------------------------------------------------------