Wednesday, February 15, 2012

கிழிசல்களைத் தைப்போம்


கிழிசல்களைத் தைப்போம் 


நாடுகளிடை நடக்கும் பனிப்போர் போல் 
நம்மில் தம்மிலும் தீராத சிறு சிறு உரசல்கள் 


நாகரீக நயவஞ்சகத்தில் நைந்திட்ட அவைகள் 
நம் மானம் புறத்தாக்கும் கிழிசல்கள் 


கொள்கையில் ஒற்றுமை
கருத்துகளில் வேற்றுமை 


கொண்ட நிலையில் பிடிவாதம்   
கீழிறங்கி வராத(து) படி கடும் நீளம் 


தனித்துப் பிரிந்த ஆடுகள் போல் 
தவிக்கிறது சமுதாயக் கூட்டம் 


பிரித்தாளும் சூழ்ச்சி வென்றதில் 
பகையோர் போடும் ஆட்டம் 


ஆராய்ந்தோம் அனைத்தையுமென்றோம்
வாதத் திறத்தால் வாய்மையைக் கொன்றோம் 


அணி அணியாய்ப் பிரிந்தென்ன கண்டோம்....?
அடிப்படை உரிமைகள் தகர்ந்ததை மட்டுமல்லவா 
இறுதி அறுவடையாக்கிக் கொண்டோம்.


சொந்தக் கொள்கைகளைத் திணித்தோம்-முரண்
கொண்ட உண்மையைத் தலை துணித்தோம்


பொய்களில் கல்லாவை நிரப்பியது போதும்- இனியேனும் 
கல்புகளில் அல்லாவைப் பதிந்திடுவோம் நாமும்


நபிகளின் சுன்னத்தை மேன்மையாய் நாடுவோம் 
நன்மைநிறை ஜன்னத்தை நற்செயல்களில் தேடுவோம் 


போதும் நம்மிடை இயக்க உருவாக்கங்கள்- கொண்ட 
பொதுக் கொள்கையில் முதலில் ஒற்றுமை உருவாக்குங்கள்.


குறுக்கும் நெடுக்குமாய் வளைந்து குணமென்ன கண்டீர்...?- சமூகம் 
வெறுக்கும் முன் ஒரு நிலைப்பாட்டில் அடங்குவோம் வாரீர்.
-----------------------------------------------------------------------------------------------------------------

No comments: