Wednesday, February 15, 2012

இவனைக் கண்டு கொள்ள(கொல்ல) அருள் புரிவாய் இறையோனே ...


இவனைக் கண்டு கொள்ள(கொல்ல) அருள் புரிவாய் இறையோனே ...


இறையோனை முற்றிலும் மறந்து 
இறைத் தூதர் கட்டளைகள் துறந்து 
இச்சையின் வழிப் போக்கில் பறந்து 
இழியூர் தன்னில் நிற்கிறது நம் சமுதாயப் பருந்து


காரணம் ஆயிரம் கண்டது மண்ணும்- எனினும்
கருவியாய் இவன் ஒருவன் இலங்கியது மின்னும் 
கல்புகளின் நேரோட்டம் இவனால் தான் பின்னும்
கலங்க வைத்தே தன்வசப்படுத்தும் கலையில்தான் இவன் கண்ணும் 


இவன் சுய சரிதை இப்போதுதான் வந்தது வெளிச்சத்தில் 
இதை நன்றாய்ப் பதிந்து கொள்வோம் நம் தலைச் சத்தில் 
இகமும் பரமும் வெல்வோம் மொத்தத்தில் 
இழிகுணங்கள் ஏதுமற்ற உளச் சுத்தத்தில் 


இறை முனிவால் மண்ணகம் எட்டிய எத்தன் இவன் 
இன்பச் சுவை காட்டி ஆதி பிதாவை வீழ்த்தியவன்
இறைத் தூதர்தம் மனச் சலனம் உண்டாக்கியவன்-எனினும் 
இவரிடம் தோற்றுடைந்து பெருங்கூட்டமாய் உண்டாகியவன் 


தட்டுப்பாடின்றி கிட்டும் கள்ளப் பணம் 
தடுமாறி அலையும் கள்ள மனம் 
தவறை மட்டும் உட்கொள்ளும் கபட குணம் -இவையனைத்தும் 
தவறாமல் இவன் அமரும் சிம்மாசனம் 


இவன் காலமாற்றத்தில் கொண்ட கோலங்கள் பலதாகும் 
இணையமும் கணினியும் இவன் தூதர்களில் சிலதாகும் 
இல்லம் நிறை தொலைக்காட்சிகள் இவன் படைக்கலன்களாம் 
இன்னல் நிறை தொலை,அலைபேசிகள் இவன் அணிகலன்களாம்


பார்வையில் தடுமாறிட ஆபாசப் போர்வை விரிக்கிறான் 
பண்புளோர் எண்ண நூற்களில் பொய்க் கயிறு திரிக்கிறான்
பவ்யமாய்ப் பேதைப் பெண்டிரை இவன் வழி கெடுக்கிறான் 
பருவக் கிளர்ச்சியில் மயங்கிப் படி தாண்டிட வைக்கிறான் 


இன்னும் முடியவில்லை இவன் சுய சரிதைக் கதைகள் 
இன்றும் நிற்கவில்லை இழிந்த இவன் லீலைகள் 
இப்லீஸ் எனும் பெயருள்ள சைத்தான் தான் இவன்-நம் 
இரத்த நாளங்களிலும் உறங்காது ஓடிக் கொண்டிருக்கிறான் 


விக்கிடும் இக்கட்டில் இப்பாவியின் பிடி சிக்கியுள்ள நாம் 
விடுபடும் வழி இறையோனிடம் இறைஞ்சுவது தாம் 


விண்ணோர் மண்ணோர் வணங்கிடும் இறையே !
விஞ்சி எம்மில் நிறைந்திருப்பதனைத்தும் குறையே 


அஞ்சி உன்னிடமே அடைக்கலம் நாடுகிறோம் 
அழுது கெஞ்சியே உன் அபயமும் தேடுகிறோம்


விரித்த எமது கரங்களில் உனதருள் நிறைத்திடுவாய்-நிரந்தரமாய் 
வீணன் சைத்தானை விலங்குகளில் பிணைத்திடுவாய்


இணையில்லா மறையும் கறையில்லா கனி நபியும் 
இனிதே எமக்களித்த துணையில்லா தூயோனே
எவர் எமைக் கைவிடினும் 
எமக்கு என்றும் நீயே காப்பு.
----------------------------------------------------------------------------

No comments: