Wednesday, February 15, 2012

மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்



மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்

சாலைகளில் செல்லும்போது சாலையோர விளம்பரப் பலகைகளைக் கவனித்திருப்பீர்கள் இவ்வாறு "வன வளம் பேணுவோம்,மழை பெறுவோம்" என்று ....இன்னும் சில நாட்களில் "நம் மன வளம் பேணுவோம் ,உயிர்களைக் காப்போம் " என்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப் படலாம்.ஏனெனில் மன நலம் என்பது இன்று நம்மிடையே காணாமல் போன பொருளாகிவிட்டது.

அண்மையில் நடை பெற்ற இரு சம்பவங்கள் என் மனதை மிகவும் பாதித்தன.
மாணவனின் இடுப்பு எலும்பை அடித்தே முறித்திட்ட ஆசிரியர் -ஒன்று 
கண்டித்த ஆசிரியையின் கழுத்தைத் துண்டித்த மாணவன் -இரண்டு 
என இரு வருந்தத் தக்க நிகழ்வுகள்.இவைகளே இக்கட்டுரை எழுதத் தூண்டிய காரணிகளாகும்.

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம் ......?எண்ணிப் பார்த்தோமா...?

ஒழுக்கம் கற்பிக்கும் இடத்திற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை.ஒழுக்கம் கற்கும் இடத்திலேயே தவழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை நிலை.

குற்றம் யார் மீது என்று மூளையைக் குழப்பிக் கொண்டு வாதம் செய்ய வேண்டாம்.இனியேனும் இது போன்ற கொடுமைகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை முடுக்கி விடுவோம்.

மாணவர்களின் நலன் பேணும் வகையில் அமைந்த கீழ்க்காணும் ஆலோசனைகள் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல.மாறாக இவை அனைத்தும் முன்னோடி கல்வியாளர்களின் சிந்தனைகளாகும்.

1.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தமது சுய விருப்பத்தை திணிப்பதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.உதாரணத்திற்கு மருத்துவர் பிள்ளை மருத்துவராகவும்,பொறியாளர் பிள்ளை பொறியாளராகவும் தான் வரவேண்டும் என விருப்பப் பட்டு அவ் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது.இவ்வாறு செய்யும் போது  பிள்ளைகள் தாங்க வொண்ணா மனச்சுமைக்கு ஆளாகின்றனர்.அதனால் அவர்களின் இயல்பான மனதில் ஒரு இறுக்கம் நிறைந்து விடுகிறது.கடமைக்கு வேண்டி மட்டும் கல்வி பயில்வர்.அதில் அவர்களுக்கு கல்வித் தேர்ச்சி என்னவோ கிடைத்து விடும்.ஆனால் மன முதிர்ச்சி மற்றும் சுய ஆளுமைப் பண்புகளின் வளர்ச்சி தடைப்பட்டு விடும்.எனவே பெற்றோர் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்க முற்பட வேண்டாம்.

2.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழு நேரமும் வேலைப் பளுவில் ஆழ்த்த வேண்டாம்.உதாரணத்திற்கு காலை முதல் மாலை வரை பள்ளி,பின்னர் தனிப் பயிற்சி ,பின்னர் நாட்டியம் பின்னர் பாடல் பின்னர் மீண்டும் படிப்பு என்று அவர்கள் உறங்கும் வரையிலும் அவர்களின் மீது தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்றுவது.இதனால் அவர்கள் உடல் மட்டுமல்ல உள்ளமும் சேர்ந்தே சோர்வடைந்து விடுகிறது.எனவே பெற்றோர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்,பிள்ளைகளுக்கு தேவையான அவசியமான ஒய்விற்கென நேரம் கொடுக்க வேண்டும்.

3.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒய்வு மற்றும் விடுமுறை நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கத் தூண்ட வேண்டும்.அதே சமயம் அவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்த கணினி,இணைய மற்றும் தொலைக்காட்சி விளையாட்டுக்களை விளையாடுவதை நிறுத்தச் செய்து தம் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்.திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளில் வரும் பொம்மைப் படங்களிலும் தற்போது வன்முறைக் காட்சிகள் அதிகம் காட்டப் படுவதால் அவைகளைப் பார்ப்பதை விட்டும் பிள்ளைகளைத் தடுக்க வேண்டும்.

4.பெற்றோர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகளின் கைகளில் அலைபேசிகள் தருவதை நிறுத்த வேண்டும்.பள்ளி நிர்வாகங்கள் இது விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

5.பள்ளிகள் தங்கள் மாணவர்களை அடிமைகள் போல் நடத்தும் போக்கு முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.நூற்றுக்கு நூறு விழுக்காடு கல்வித் தேர்ச்சி மட்டும் பள்ளிகளின் குறிக்கோளாக இருக்கக் கூடாது.மாறாக தங்கள் மாணவர்கள் மாண்புயர் பண்புகளிலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவதையும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

6.பள்ளிகளில் மாணவர்களை அளவுக்கு மீறி தண்டிப்பதை நிறுத்த வேண்டும்.மாணவர்களுக்கு கொடுக்கப் படும் தண்டனை அவர்களை மனம் திருந்தச் செய்யும் படியாக மட்டுமே இருக்க வேண்டும்.மேலும் மாணவர்களுக்கு  மன நலம் வளர்க்கும் நீதி போதனை வகுப்புகள்,யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.இதுபோன்ற வகுப்புகளை ரத்து செய்து அவைகளிலும் மற்ற பாடங்கள் நடத்தும் போக்கைக் கைவிட வேண்டும்.ஏனெனில் நீதி போதனைகள் மற்றும் யோகாசனப் பயிற்சிகள் மட்டுமே மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் மன வளம் வளர்க்கக் கூடியவை என்பதை பள்ளி நிர்வாகங்கள் புரிந்துணர வேண்டும்.

7.மாணவர் ,ஆசிரியர் மற்றும் பெற்றோர் நல்லுறவு பேணப் பட வேண்டும்.பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இதை உறுதி செய்திட வேண்டும்.

8.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் ஆசிரியர்களை மதித்து நடக்கும் பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

9.ஆசிரியர்களும் மாணவர்களை தங்கள் சொந்தப் பிள்ளைகளைப் போல்   
கருதி அவர்களிடத்தில் கனிவுடன் நடந்திட வேண்டும். 

10.மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தயவு செய்து தற்போதைய கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யப் பட வேண்டும்.பாடப் புத்தகங்களில் உள்ளதை மனப்பாடமாக்கி (மூளையில் திணித்து ) அதனை தேர்வுத் தாள்களில் வாந்தி எடுக்கச் செய்து அதன் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிப்பதை நிறுத்திடல் வேண்டும்.மாறாக அவர்தம் புரிதல் திறன், வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவைகளை ஆய்வு செய்யும் விதத்தில் கல்வி முறை மாற்றப் பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட சான்றோர் சமுதாயம் இதுகுறித்து சிந்திக்குமா ?......மாணவ சமுதாயம் நல்ல மாற்றங்களைச் சந்திக்குமா....?

நல்விளைவுகளை எதிர்நோக்கியவனாக
அபுஸாயிமா