Friday, February 17, 2012

கடையநல்லூர் .....அந்த நாள் ஞாபகம்


கடையநல்லூர் .....அந்த நாள் ஞாபகம்

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு எங்கள் வீடு தரமூடாக (கைத்தறி 
ஜவுளி தரகனார் வீடு) இருந்த காலம்.
தெருவில் உள்ளவர்கள்,சொந்தக்காரர்கள் என நெசவு செய்பவர்கள் (தறிகாரர்கள்) நூல் கழிகளை வாங்கிச் செல்வர்.பின்னர் அதைப் பாவோடி, பாவு ஆத்துவர்.அப்போது சாம்பு குறி குத்த கயிறு கட்டிய மை பாட்டிலையும் டேப்பையும் எடுத்துக் கொண்டு வாப்பாவுடன் ஒன்றிரண்டு முறை போனதும் 

நெசவு செய்து தறிகாரர் கொண்டு வந்த சாம்புகளை வாப்பா பூதக் கண்ணாடி வைத்து நூல் அளவிட்டு பார்த்த பிறகு கடை ஊழியர்கள் அதைக் கறந்து கைலி மடிகளாக தயார் செய்து பின்னர் கைலிகளாகக் கிழித்து பசை போட்டு தேய்க்க வைத்து மடித்து லேபில் ஒட்டி பின்னர் கைலிகளை(கர்சீப் என்றால் ஒரு டசன் கர்சிப்களை ) பாலிதீன் கவரில் இட்டு மெழுகுவர்த்தி கொண்டு இளக்கி சீல் செய்து அடுக்கி ஒலைப்பாய்களில் பார்சல் செய்து பிரஸ்ஸில் வைத்து அமுக்கி கயிறு கொண்டு கட்டி ,சாக்கு கொண்டு சிப்பங்களாக்கி ஊசி நூல் கொண்டு தைத்து மையால் பெயர் எழுதி ABT பார்சல் லாரி சர்விஸ் மூலம் ஈரோடு ,கரூர்,காயல்பட்டினம், நாகூர்,மதுரை ,ஒட்டன்சத்திரம் போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைத்ததும் 

அனுப்பி வைத்த சரக்குகளுக்கு பணம் வசூல் செய்ய வாப்பா அவ்வப்போது போய் வந்ததும் ,ஈரோடு, கரூர் போய் வந்தால் மணப்பாறை முறுக்கு ,நாகூர் போய் வந்தால் கலர் பூந்தி, காயல்பட்டினம் போய் வந்தால் கலர் அல்வா ,மதுரை போய் வந்தால் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடை இனிப்புகள் வாங்கி வந்ததும் ,அதற்காக பிள்ளைகள் நாங்கள் காத்திருந்ததும் இன்னும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளன.

அந்தக் காலத்தில் எமதூரில் கைத்தறி ஜவுளி வியாபாரம் நல்ல வருமானம் தரக் கூடிய தொழிலாக இருந்தது.தறிகாரர்களுக்கும் வருமானம் மனதுக்கு நிறைவாக கிடைத்துக் கொண்டிருந்தது.பின்னர் நாளடைவில் விசைத்தறிகளின் வரவால் அது சீரழிந்து விட்டது.வருமானம் குறைந்ததால் பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்கு எமதூர் சொந்தங்கள் (நான் உட்பட) படை எடுத்த காரணத்தால் கைத்தறிகள் போன்ற குடும்பத் தொழில்கள் அனைத்தும் முடக்கப் பட்டன.அதன் பின் இப்போது வரை உள்ள நமது நிலைமை அனைவரும் அறிந்ததே .

ஆனாலும் அந்தக் காலத்தில் குறைந்த வருமானமாக இருப்பினும் அதில் கிடைத்த மகிழ்ச்சி ,நிம்மதி ,மன நிறைவு மட்டும் பணம் தாராளமாகப் புரளும் இந்தக் காலத்தில் கிடைக்கவே இல்லை.காரணம் அப்போது வருமானத்திற்கேற்ப தேவைகளை வைத்துக் கொண்டோம் .ஆனால் இப்போது வருமானம் அளவுக்கு அதிகமாய் வர வர நம் தேவைகளின் ஏற்றமும் உயருகிறது.நமது உழைப்புச் சுமை கூடுகிறது.மனம் நொந்து வாடுகிறது .முன்பு பிழைப்பிற்காக வெளிநாடுகள் செல்லத் துவங்கிய நாம் இன்று ஊரில் நமது சுய கௌரவத்தை நிலைநிறுத்த வேண்டி மட்டுமே வெளிநாடு சென்று கொண்டிருக்கிறோம்.இருப்பதைக் கொண்டு சிறப்பிக்கும் திருப்தியடையும் நல்ல மனது நம்மிடம் இன்று இல்லை.அயல் நாட்டு வரவுகளில் நாம் இழந்த வாழ்க்கைகள்,உறவுகள் ,உணர்ச்சிகள் எண்ணில் அடங்காதவை.எனினும் வெளி நாட்டு மோகம் நம்மை ஆட்டிப் படைக்கிறது.மீண்டும் மீண்டும் பாஸ்போர்ட்களை கையில் பிடித்து நடக்க வைக்கிறது.

இதோ ...இப்போது கூட" பழங்கதை பேசியது போதும் .....கதைகளால் கரன்சி கிட்டாது ...போய் பிழைக்கிற வழியப் பாரு....பிளைட் டிக்கட் கன்பாம் ஆயிடுச்சான்னு போயி பாரு " என்று பெற்றோர் விரட்டுவது காதில் விழ இத்துடன் இக்கட்டுரைக்கு வைக்கிறேன் முற்றுப் புள்ளி .

நட்புடன் 
அபுஸாயிமா 

No comments: