Monday, May 7, 2012

ஒரு கவிஞனின் க(வி)தை !


ஒரு கவிஞனின் க(வி)தை !

என் படிப்பறையில்
ஒரு நாள்...
இரவு நேரம்
நல்ல நிசப்த வேளை.....!

மின்விசிறியின் அலைக்கழிப்பில்
அங்குமிங்கும் திரும்பிக் கொண்டிருந்தது...
மேசை மீது கனத்தினடியில் வைக்கப்பட்டிருந்த
என் கவிதை தாங்கிய காகிதம்...!

காகிதத்தின் அருகில்
நல்லதோர் கவிதை எழுதி முடித்த
வெற்றிக் களிப்பில் ,களைப்பில்
மூடியினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது என் பேனா....!

மேசை அடியினில்
குப்பைக் கூடையில் மொத்தமாய்க்
கொட்டிக் கிடந்தன...
நான் கசக்கி எறிந்திட்ட
நிறையக் காகிதங்கள்...!

அறையிலிருந்து
வெளியில் சென்று
திரும்பிய நான்
தற்செயலாக
படிப்பறையின் வாயிலில்
கால் வைத்த போது
அறையினுள் நிகழ்ந்த
ஒரு விசித்திர உரையாடலைச்
செவியுற்று வியப்பில்
வாசலில் அப்படியே நின்றேன்...!

குப்பைக் கூடைக் காகிதங்கள்
மேஜைக் காகிதத்திடம் ஒருமித்துக் கூறத் தொடங்கின....!

" நாங்களும் உன் சகோதரிகள்தான் -இதோ
இந்தப் பேனாவின் சொந்தக்காரன்
உன்போல் எம்மையும் மணமுடித்து
சிந்தனை மையல் கொண்டு
பேனாவின் 'மை' கொண்டு
எமை மருவியதில்
கருத்து எழுத்துக்களைக் கருக்கொண்டு
கவிதைக் குழந்தைகளை உருக்கொண்டு
உன் போலவே நாங்களும் பெற்றெடுத்தோம்...! "

எனினும் அவை.....

"நிறை மாத சிசுக்களாயில்லை எனக் கூறி
குறை தன்னுள் கொண்ட அவனே
 எமைக் குற்றவாளிகளாய்த் தீர்மானித்து
குடும்ப விலக்கும் செய்து எம்மைக்
குழந்தைகளுடன் குப்பையில் வீசி எறிந்து விட்டான்...!."

"எம்மில் குறை கண்ட அனுபவத்தில்
சிந்தனைப் பலவீனத்திற்கு அவன்
சிகிச்சை செய்து கொண்டு
சிறப்பாய் உன்னை மருவியதில்
சீக்கிரம் கருக்கொண்ட நீ
நல்ல உருக்கொண்ட நயமான
கவிதைக் குழந்தையைப்
பெற்றெடுத்துக் கொடுத்ததால்
உனக்கு மணவிலக்கும் இல்லை
குப்பைக் கூடை வாசமும் இல்லை..."

"நீ வேண்டுமானால் பார் சகோதரி....!"

"இன்னும் சிறிது நேரத்தில் எமைக்
குப்பை வண்டிகளில் ஏற்றி
அனாதைகளாக்கிவிட்டு -உன்னை மட்டும்
முத்தமிட்டுப் புகழ்ந்து போற்றுவான்..! - நீ
பெற்றெடுத்த குழந்தையாம்
கவிதையை பெருமையாய்
சபைதனில் அரங்கேற்றுவான்..!."

"எமக்குத்தான் இனி ஜீவனுமில்லை...!
ஜீவானாம்சமும் இல்லை...!
என்ன செய்வது சகோதரி...?"

மனவருத்தம் தான் எனினும்....

"நாங்கள் வாழாவெட்டிகளாய் மரித்தாலும்
உன்னையேனும் சுமங்கலியாய்
வாழக் கண்டதில் மகிழ்ச்சி எமக்கு..!- நீ
நிரம்பக் குழந்தைகளுடன் நீடூழி வாழ்க.....!"

இத்துடன் உரையாடல்
நிறைவுற்ற வேளை.....
வியப்பிலிருந்து விடுபட்ட நான்
படிப்பறையின் உள் சென்றேன்....

பதறிய சிந்தனையுடன் பாய்ந்த நான்
கவிதை கொண்ட காகிதத்தைப்
பெட்டியினுள் பூட்டி
பத்திரப் படுத்தினேன்...!

குப்பைக் காகிதங்களை வேகமாய்
அவ்வறையை விட்டும்
அப்புறப் படுத்தினேன்....!

காகித உரையாடல் தந்த
குற்ற உணர்வில்
தலை கவிழ்ந்த நான்....

நாளைய..
கவிதை அரங்கேற்றக் காட்சி

கண் முன் மின்னலாய்த்
தோன்றி மறைந்திடத்

தலை நிமிர்ந்தேன்...
கவிஞனாக.....!

No comments: