Friday, May 11, 2012

தூர தேசத்திலிருந்து துணைவிக்கு ஒரு துக்க மடல்.


தூர தேசத்திலிருந்து துணைவிக்கு ஒரு துக்க மடல்.
---------------------------------------------------------------------------------

ஆயிரம் பேரிங்கு என்னை
அணைத்துக் கொள்கின்றனர்
அவ்வப்போது
நட்பு பாராட்டியே... எனினும்
என் மனம் அவர்தம் அணைப்பை
பொருட்படுத்துவதில்லை.

எதிர்ப்படும் தோழரனைவரும்
என்னோடு
கை குலுக்கிக் கொள்கின்றனர்
அன்பின் அடையாளமாய்... எனினும்
என் உள்ளத்தில் ஒரு அசைவுமில்லை.

சந்திக்கும் அனைவரும்
என்னிடம்
சரீர நலம் விசாரித்துச் செல்கின்றனர்
சகஜமாய்த்தான்... எனினும்
எனக்கவை சாதாரணமாகத் தோன்றுவதில்லை

இவ்வாறான

தளர்ச்சி,மந்தநிலை, துக்கம் மற்றும்
அதிருப்தியென எனைச் சூழ்ந்திட்ட
இயலாமைகளின் மூலகாரணம்
நீயானது குறித்து
ஆரும் வெளிப்படையாய்
அறிந்திருக்கவில்லை.

உயிரின் அடி வரை
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிடும்
உன் உன்னத ஸ்பரிசம்
கிட்டாது போய் பல வருடங்களானதால்
இப்போது என்னில் இல்லை
உணர்வுகள் எதுவும் உயிரோடு..!

உயிரும் மெய்யும்
உன்னோடு முழுதாய்
தந்து விட்டதாலோ என்னவோ
உணவுண்டு உயிர்வாழ்ந்தும்
உணர்வற்ற ஜடமாகவே இங்கு நான்
உலாவிக் கொண்டிருக்கிறேன்..!

தூரங்கள் நமைப் பிரித்து
துயர் தருகின்ற இப்பொழுதுகளில்
மன பாரங்கள் இறக்கி வைப்பதென்னவோ- நம்
மழலையின் கொஞ்சும் சிரிப்பின் நினைவும்
மாதத்தில் சில முறைகள்
தொலைபேசி வழியே வரும்
மாறாத உன் அன்பின் விசாரிப்பும் தாம்...!

பண்டிகை தினங்கள்
கொண்டாட்டங்கள் பலவும்
பணியின்றி விடுப்போடு
மகிழ்ந்திடவே வந்தாலுமவை
பக்கத்தில் நீயிருந்து
பரவசம் தரவில்லையாதலால்
பத்தோடு பதினொன்றாய்
எப்போதும்போல் வந்து கழிகின்றன...!

மனம் கொண்டு மணம் கொண்ட
மல்லிகையுன்னை வாட விட்டுவிட்டு
மனமின்றி அயல் தேச மண்மிதித்து இன்று
அகங்கார முதலாளி வீட்டீன்
அலங்காரத் தோட்டத்திற்கு
அடியேனும் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கின்றேன்...!

ஒரு முறை "மடையன்"எனச் சொன்ன
உடன்பிறந்த சகோதரனை அறைந்து
கன்னம் சிவக்கச் செய்த கோவக்காரனாய்
வீட்டிலென்னைக் கண்டிருக்கிறாய் நீ..! -இங்கோ
அகந்தை கொண்ட முதலாளியெனை
ஆயிரமுறை "மடையன்" என்றபோதும்
ஆர்ப்பரிக்காது அமைதி காக்கிறேன்....காரணம்
அவன் தரும் சில ஆயிரங்களில்
என் தன்மான உணர்வுகளனைத்தும்
மரத்துப்போய் விட்டதால்...!

நரக வேதனையில் உழன்றிங்கு
நலிந்தே பல ஆண்டுகள் கழித்து
நரம்புகள் தளர்ந்து
நாடிகள் சுருங்கியபின் உனை
நாடி வந்து சேர்ந்தால்
நன்மையுண்டோ...?
கோடிக் கணக்கில் பணம்
கொண்டு வந்து சேர்த்தாலும்
குணம் கெட்ட பலம்
அப்போது நலம் பெறுமா...?
என் சொல்வேன் என் நிலைமை...?

அழுது தீர்க்கும் ஆற்றாமையை
எழுதியே தீர்த்து இருக்கின்றேன்
பழுது ஏதுமின்றி விரைவாகவே- உன்
பக்கம் ஏகி உனைச் சேர்ந்திட
படைத்தோன் இறையிடம்
பரிசுத்த மனதினாய் பணிவுடன்
பகலிரவு நேரங்களனைத்திலும்
தொழுது வழுத்திடுவாயடி என்
துணையான தோழி நீயுமே ...!

No comments: